எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை புரிந்து கொள்வதில் உள்ள முரண்பாட்டின் காரணமாகவே சீன ராணுவ ஊடுருவல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாகில் உள்ள தேம்சௌக் மற்றும் சூமர் பகுதிகளில் சீன ராணுவம் இரு முறை ஊடுருவல் செய்ததாக வெளியான செய்தி குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல் சம்பவங்கள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. இவ்வாறு ஊடுருவும் சீன ராணுவத்தினரை இந்திய ராணுவப் படையினர் விரட்டியடித்துள்ளனர். இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்’ என்றார் ராஜ்நாத் சிங். சீன ஊடுருவல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்ததாவது:
கடந்த செவ்வாய்க்கிழமை தேம்சௌக் பகுதியில் வாகனங்களில் வந்த ஏராளமான சீன ராணுவத்தினர், அதை தங்கள் நாட்டுப் பகுதி என்று உரிமை கொண்டாடினர்.
அவர்களை இந்திய ராணுவம் மற்றும் இந்திய – திபத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சுமார் 30 நிமிடங்கள் சீன ராணுவத்தினர் அந்தப் பகுதியில் சூழ்ந்திருந்தனர்.
பின்னர் அந்தப் பகுதியை விட்டு அவர்கள் கிளம்பிச் சென்றனர். இதேபோல் சூமர் பகுதியிலும் கடந்த 13ஆம் தேதி சீன ராணுவத்தினர் குதிரைகளில் வந்தனர். அவர்களையும் இந்திய ராணுவத்தினர் திருப்பி அனுப்பினர் என்று அந்தத் தகவல்கள் தெரிவித்தன.