மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் கைது

ஒடிஸாவில், கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் சப்யசாச்சி பாண்டா, பெர்ஹாம்பூரில் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

பெர்ஹாம்பூர் படா பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து, நள்ளிரவில் அதிரடியாக அந்த வீட்டைச் சுற்றிவளைத்த போலீஸார், அவரைப் பிடித்தனர். அவரிடம் இருந்து அரை கிலோ தங்கம், ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஒடிஸா காவல் துறைத் தலைமை இயக்குநர் சஞ்சீவ் மாரிக் புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாண்டா ஒளிந்திருக்கும் இடம் குறித்து மாநில உளவுப் பிரிவினர் அளித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. அனிருத் சிங் தலைமையிலான காவல் துறையினர் படா பஜார் பகுதியில் இருக்கும் ஏ.சந்திர ராவ் என்பவரின் இல்லத்தை நள்ளிரவு சுற்றி வளைத்தனர். மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக பாண்டா அந்த வீட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது.

போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்ததும் பாண்டா, ஓர் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டு தப்ப முயன்றார். எனினும், அந்த அறையின் கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்றனர். எதிர்ப்பு எதையும் காட்டாத அவரை போலீஸார் உடனே கைது செய்தனர்.

தலைக்கு ரூ.5 லட்சம்: கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாண்டா தேடப்பட்டு வந்தார். 48 வயதான இந்த நக்ஸல் இயக்கத் தலைவரின் தலைக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

கணிதப் பாடத்தில் பட்டதாரியான பாண்டா, நயாகரைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் சப்யசாச்சியின் மகன் ஆவார். 1995-96 முதல் சுமார் 60 வழக்குகளில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் 10 கொலை வழக்குகளும் அடங்கும். இவர் திட்டமிட்டு, செயல்படுத்தி, பங்கேற்ற நக்ஸல் தாக்குதல்களில் 25 பாதுகாப்புப் படையினரும் 34 அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர்.

விஎச்பி தலைவர் கொலை வழக்கில் முக்கிய எதிரி: பாண்டா, கடந்த 2008-இல் நிகழ்ந்த வி.எச்.பி. தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி படுகொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியாவார். இதைத் தொடர்ந்து, கந்தமால் மாவட்டத்தில் வகுப்புக் கலவரம் மூண்டது. மேலும், அதே ஆண்டு நயாகர் மாவட்டக் காவல் துறையினரின் ஆயுதக் கிடங்கு, காவல் துறைப் பயிற்சிப் பள்ளியைக் கொடூரமாக தாக்கியதிலும் பாண்டாவுக்கு முக்கியப் பங்குண்டு. அந்தச் சம்பவத்தில் 15 போலீஸார் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு, 2012-இல் இரு இத்தாலிய நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கடத்தியதிலும் இவருக்குத் தொடர்பு உண்டு என்று சஞ்சீவ் மாரிக் கூறினார்.

குறைந்துபோன செல்வாக்கு: கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்குள் எதிர்ப்புக் குரல் எழுப்பியதாலும், பணத்தைக் கையாடல் செய்த புகாரின் பேரிலும் அக் கட்சியில் இருந்து பாண்டா நீக்கப்பட்டார். அதன் பிறகு,அவரது செல்வாக்கு நாளுக்குநாள் சரிந்தது.

பிறகு தனக்கென ஒடிஸா மாவோவாதி கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானார். போலீஸார் சளைக்காமல் நடவடிக்கை மேற்கொண்டு, பாண்டாவின் உதவியாளர்களைத் தேடிப் பிடித்து சுட்டுக்கொன்று அவரைத் தனிமைப்படுத்தினர். கடந்த பிப்ரவரியில் வனப் பகுதியில் போலீஸார் நடத்திய அதிரடித் தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார்.

TAGS: