சுவிட்ஸர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என இந்தியா நெருக்குதல் அளித்துவருகிறது. இந்த நிலையில், இவ் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்புமாறு அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்கும் விவகாரத்தில் சுவிஸ் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிவதற்கு அந்நாட்டு நிதி அமைச்சகத்துடன் பிடிஐ செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டது.
அப்போது சுவிஸ் நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் பெர்ன் நகரிலிருந்து தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் தெரிவித்தது:
இந்தியா கேட்டுவரும் விவரங்கள் குறித்து சுவிஸ் அரசு அளித்த பதிலின் முழு விவரத்தை வெளியிட முடியாது.
தகவல் பரிமாற்றம் இரு விதமாகும். வங்கிகளின் வெளிநாட்டு வாடிக்கையாளர் குறித்து ஏதேனும் முறைகேடு இருப்பதாகத் தெரிய வந்தால், அந்த வாடிக்கையாளர் வசிக்கும் நாட்டின் அரசுக்கு தானாக முன்வந்து விவரங்கள் அளிக்கப்படும்.
இதுதவிர, வெளிநாட்டு அரசு ஏதேனும் தகவல்களைக் கோரிய பிறகு அவற்றை அளிப்பது மற்றொரு விதமாகும்.
இந்தியா எத்தனை கணக்குகள் தொடர்பான விவரங்களைக் கோரியுள்ளது என்பதையும், அதற்கான சுவிஸ் அரசின் பதில்களையும் வெளியிட முடியாது. ஒவ்வொரு நாடு தொடர்பான விவரம் கைவசமில்லை. அனைத்து நாடுகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் மொத்த எண்ணிக்கையை மட்டுமே தெரிவிக்க இயலும்.
இந்தியா-சுவிட்ஸர்லாந்து இடையே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்றை அனுப்புமாறு அழைப்புவிடுத்துள்ளோம். இரு நாடுகளிடையேயான வரி விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பு தரும் விதத்தில் இந்தப் பேச்சுவார்த்தை அமையும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சுவிட்ஸர்லாந்து வரித் துறை அமைச்சகத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2012-ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளிலிருந்து மொத்தம் 1,499 வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டன. 2013-ஆம் ஆண்டில் 1,386 விவரங்கள் கேட்கப்பட்டன.
கடந்த 2013-ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள தொகை ரூ. 14,100 கோடியாகும். 2012-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் அவ்வங்கிகளில் வைத்திருந்த தொகை ரூ. 8,547 கோடியாக இருந்தது என்று சுவிஸ் தேசிய வங்கியிடம் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ் வங்கிகளின் முன்னாள் ஊழியர்கள் சிலர் ரகசியக் கணக்கு விவரங்களைக் களவாடி சில நாடுகளுக்கு அளித்துள்ளனர்.
அந்த நாடுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்திய அரசு மேற்கொண்டு விவரங்களைக் கோரி வருகிறது. ஆனால், சட்ட விரோதமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கணக்கு விவரங்களை வெளியிட முடியாது என சுவிட்ஸர்லாந்து மறுத்துவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் அண்மையில் பேசியபோது, ரகசிய வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த முழு விவரங்களை அளிப்பதிலுள்ள சட்டச் சிக்கல்களை சுவிஸ் அரசு சுட்டிக் காட்டியுள்ளது என்றார்.
தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, ரகசியக் கணக்குகளில் கருப்புப் பணம் பதுக்கியிருப்பது தொடர்பாக இந்தியா கேட்கும் விவரங்களை அளிக்க சுவிட்ஸர்லாந்து மறுத்துவருகிறது. எனவே, சுவிட்ஸர்லாந்தின் சட்டத்துக்குள்பட்டு இந்தியாவின் நலன் பாதுகாக்கப்படும் விதத்தில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் அருண் ஜேட்லி மக்களவையில் தெரிவித்திருந்தார்.