உலகின் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில்: ஐநா

child-marriageஉலக அளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள், குழந்தையாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், அவ்வாறு சிறுமியாக இருக்கும் பொழுதே மணமகளாக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்வதாகவும் ஐக்கிய நாடுகளின் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண் உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சாரகர்கள் உள்ளிட்டோர் பங்குபெறும் பிரிட்டன் அரசாங்கம் மற்றும் யுனிசெஃப் சேர்ந்து நடத்தும் ‘த கர்ல் சம்மிட்’ என்ற மாநாட்டில் யுனிசெஃப் இத்தகவல் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குழந்தை திருமணம், பெண் பிறப்புறுப்பை சிதைத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரமான வழக்கங்களை எதிர்க்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

தவிர பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுகின்ற கொடூரமான பழக்கத்திற்கு உலகில் 130 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாலின சமத்துவமின்மையை சமாளிக்க தேவையான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் இது போன்ற எண்ணிக்கையை குறைக்க முடியாது என்றும் யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் மற்றும் கௌரவ கொலைகள் போன்ற பெண்களுக்கெதிரான வழக்கங்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும், இந்த வழக்கங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்க தனி சட்டங்கள் இல்லை என்றும் மூத்த வழக்கறிஞரும் பெண்கள் அர்வலருமான அருள்மொழி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பெண் பிறப்புறுப்பை சிதைக்கும் பிரச்சனை இந்தியாவில் இல்லை என்றாலும், பெண்களுக்கு எதிரான கொடூரமான வழக்கங்களை குறைப்பதற்கு மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். -BBC

TAGS: