மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தில்லி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ இல்லம் தில்லி, தீன்மூர்த்தி லேன் பகுதியில் அமைந்துள்ளது.
அந்த வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தக் கூடியதைப் போன்ற உயர் தரத்திலான சக்தி வாய்ந்த இந்தக் கருவி அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்தத் தகவலால் தில்லி அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்: இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், “ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்ட நிகழ்வானது தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சர்கள் இடையே நம்பிக்கை இல்லாததைக் காட்டுகிறதது’ என்று கூறியுள்ளது.
அக்கட்சியின் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:
மத்திய அரசில் மூத்த அமைச்சராகப் பதவி வகிக்கும் நிதின் கட்கரி, பாஜகவின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். அவரது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது என்ற செய்தி சரியானது என்றால், இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இது அமைச்சரவை சகாக்களிடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது.
இந்த விவகாரத்தில் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதை பாஜக, மத்திய அரசு ஆகியவை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. ஒருவேளை ஒட்டுக்கேட்பு நடந்திருந்தால் அது குறித்த தகவல்களை நாட்டு மக்கள் முன்பு வைக்க வேண்டும்.
யாருடைய தூண்டுதலால் ஒட்டுக் கேட்பு நடத்தப்பட்டது? இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? இவை பற்றி பாஜக, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று ரண்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
காங்கிரûஸச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், “”இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றார்.
அமைச்சர் கட்கரி மறுப்பு: இதனிடையே, தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டதாக பத்திரிகையில் வந்த செய்தியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், “பத்திரிகையில் வெளியான செய்தி ஊகத்தில் அடிப்படையிலானது’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கட்கரியின் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.