மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வீடுகளிலும் ஒட்டுக் கேட்புக் கருவி பொருத்தப் பட்டிருக்கிறது என்று வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் வெளிநாட்டு உளவு சக்திகளால், சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டு, அவை கண்டு பிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் வீடுகளிலும் இத்தகைய கருவிகள் பொருத்தப் பட்டதாக வெளியான தகவல் மத்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர்களின் வீடுகளில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக வெளியான தகவலைக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, கடுமையாக இதனை விமர்சித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் மத்திய அமைச்சர்களின் வீடுகளில் இத்தகைய ஒட்டுக் கேட்புக் கருவிகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.