ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாஜகவின் மூத்த உறுப்பினர் அழகப்பன் மரணம்: வைகோ இரங்கல்

yco_002பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தவருமான எம்.வி.எம் அழகப்பன் காலமானார்.

சென்னையில் நேற்று அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

81 வயதான அழகப்பன், வடபழனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமானார்.

இதனையடுத்து அவருடைய உடல் அவரின் விருப்பப்படி ராமசந்திரா மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளது.

அழகப்பன், இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் முக்கிய கருத்து பகிர்வாளராக செயற்பட்டார்.

அத்துடன் கச்சதீவு மீண்டும் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வந்தார்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது பாரதீய ஜனதாக்கட்சியில் இணைந்த அவர், நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கும் குரலாக வாழ்ந்த பேராசிரியர் அழகப்பன் மறைவு! தாங்க முடியாத இழப்பு- வைகோ இரங்கல்

பாரதீய ஜனதா கட்சியின் அறிவுச் சிந்தனையாளர்கள் குழுமத்தின் ஆலோசகராகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் அழகப்பன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைத் தலைவராக, வணிக நிர்வாகத்துறையில் பேராசிரியராகப் பணி ஆற்றிய பேராசிரியர் அழகப்பன் அவர்கள், ஈழத்தமிழர்கள் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஆழ்ந்த ஞானமும், புரிதலும் கொண்டு இருந்தார். அப்பிரச்சினை குறித்து மிகச்சிறந்த ஆங்கில நூல்களை எழுதி இருக்கிறார்.

சுதந்திரத் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்பதையும், தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான சிங்கள அரசைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்பதையும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில, அகில இந்தியக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

2010 ஆம் ஆண்டு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று, டெல்லியில் தீர்ப்பு ஆயத்தில் வாதாடினார். இல.கணேசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி முன்னணித் தலைவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது, 24 மணி நேரமும் ஈழத்தமிழர்களைப் பற்றிச் சிந்தித்தவர். அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றார்கள்.

பல ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் பல மணி நேரம் என்னிடம் விவாதிப்பார். அண்மையில் யஷ்வந்த் சின்கா அவர்கள் என் இல்லத்திற்கு வந்தபோது, பேராசிரியர் அழகப்பன் அவர்களும் அங்கு வந்து, நீண்ட நேரம் இப்பிரச்சினை பற்றிப் பேசினார்.

ஈழத்தமிழர்களுக்காக பாரதீய ஜனதா கட்சியில் எந்தத் தயக்கமும் இன்றித் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த ஒரு அறிவாளியை, சிந்தனையாளரை இழந்து தவிக்கின்றோம். அந்த இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது. தான் உயிர் நீத்தபின்பு, தன்னுடைய உடலை இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்து இருக்கின்றார்.

அவரது அருமைப் புதல்வி விம்மலும் கண்ணீருமாக என்னிடம் பேசும்போது, “ஏழைகளுக்காகவும், துன்பப்படும் மனிதர்களுக்காகவும் எப்பொழுதுமே கவலை கொண்டு உதவுகின்ற மனிதாபிமானி என் தந்தை” என்றார்.

அத்தகைய உத்தமர் அழகப்பன் மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: