மீட்கப்பட்ட 76% குழந்தைத் தொழிலாளர்கள் மும்பையில் மீண்டும் வேலை செய்யும் அவலம்

மும்பையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட 76 சதவீத குழந்தைத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் உரிமைகளுக்கான க்ரை (சி.ஆர்.ஒய்.), கேர் (சி.ஏ.ஆர்.இ.) ஆகிய அமைப்பு சாரா தன்னார்வ அமைப்புகள் இணைந்து மும்பையில் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றுவோர் குறித்து ஆய்வு நடத்தின.

பின்னர் அந்த அமைப்புகள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

மும்பையில் 2008ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த குழந்தைகள் மீட்கப்படுவதற்கு முன்பு 83.53 சதவீதம் பேரை 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கியதுடன், வேலை அளிக்கும் நிறுவனங்கள் அவர்களை கொத்தடிமைபோல் மோசமாக நடத்தியிருந்தனர்.

ஏறக்குறைய 25 சதவீத குழந்தைகள் பெற்றோரிடம் அல்லது காப்பாளர்களிடம் போலீஸாரால் நேரடியாக ஒப்படைக்கப்பட்டனர். எனினும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை “குழந்தைகள் நல ஆணையம்’ முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என்ற விதிமுறையும் பின்பற்றப்படவில்லை.

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 76.47 சதவீதம் பேர் மீண்டும் முழு நேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 18.82 சதவீதம் பேர் வேலை செய்துகொண்டே படிக்கிறார்கள். 85 குழந்தைகளில் 4 பேர் மட்டுமே பணிக்குச் செல்லவில்லை.

குழந்தைகளை பணிக்கு அமர்த்தும் முக்கிய 3 துறைகளாக ஹோட்டல்கள், தோல் தொழிற்சாலை, ஜரிகை நிறுவனங்கள் ஆகியவை கருதப்படுகின்றன.

உலகில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவில் 5 முதல் 14 வயது வரையில் உள்ள 1 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 7.2 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS: