நியூயார்க் : மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள, யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, கைவிடப்பட்ட அந்த நிறுவனத்தால், போபால் நகரின் நிலம் மற்றும் நீர் மாசுபடுவதாக கூறி, அதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, அமெரிக்க கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, கோர்ட் தள்ளுபடி செய்தது.
கடந்த 1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில், போபால் நகரின் மத்தியில் அமைந்திருந்த, அமெரிக்க நிறுவனமான, யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு கசிந்தது. நகரில் காற்றில் பரவிய விஷ காற்றால், 5,000 பேர் பலியாயினர்; பல ஆயிரம் பேர் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான, வாரன் ஆண்டர்சன், சிறப்பு விமானத்தில் அமெரிக்கா தப்பிச் சென்று விட்டார். அதன்பின் இந்தியா பக்கம் வரவே இல்லை. எவ்வித இழப்பீடும் வழங்கவும் இல்லை.விஷவாயு கசிவால், திடீரென உற்பத்தி நிறுத்தப்பட்டு, கடந்த, 32 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள அந்த நிறுவனத்தில் உள்ள ரசாயனங்கள் மற்றும் ரசாயன கழிவுகள் காற்றில் கலந்தும், நிலத்தடி நீரில் சேர்ந்தும், மிகக் கொடிய மாசு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அந்த நிறுவனத்திற்கு எதிராக, அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில், சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான, ‘எர்த் ரைட்ஸ்’ சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கைவிடப்பட்ட அந்த பிரமாண்ட தொழிற்சாலையை அப்புறப்படுத்தும் பொறுப்பை அமெரிக்க நிறுவனம் ஏற்க வேண்டும்; மாசு ஏற்பட்டதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும், என, வழக்கில் கோரப்பட்டது. இதை நிராகரித்து, நியூயார்க் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், மாசு ஏற்பட்டதற்கும், யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கும் சம்பந்தமில்லை. எனவே, எந்த விதத்திலும் இந்த பிரச்னை, அந்த நிறுவனத்தை கட்டுப்படுத்தாது என, நீதிபதி உத்தரவிட்டார்.இதனால் ஏமாற்றம் அடைந்த, எர்த் ரைட்ஸ் அமைப்பினர், மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். யூனியன் கார்பைட் நிறுவனம் தொடர்பான முந்தைய பல முறையீடு வழக்குகளை, மேல் கோர்ட்டுகள் தள்ளுபடி செய்துள்ளதால், இந்த வழக்கும் அப்படியே ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய பிரதேச மாநில அரசும் ஒரு கட்சிக்காரராக சேர்க்கப்பட்டது. இதனால், யூனியன் கார்பைட் மாசு அகற்றம் மற்றும் தொழிற்சாலை கட்டடத்தை கைவிடும் நடவடிக்கையை, தொழிற்சாலை அமைந்துள்ள நிலத்துக்கு சொந்தக்காரர்களான, மத்திய பிரதேச மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும் எனவும், நியூயார்க் மாவட்ட கோர்ட் நீதிபதி, ஜான் கென்னான் உத்தரவிட்டார்.
அந்த தொழிற்சாலை கட்டுமானம் மற்றும் அதற்கான பணியை, யூனியன் கார்பைட் நிறுவனம் மேற்கொள்ளவில்லை எனவும், அதை, ம.பி., மாநில அரசு தான் மேற் கொண்டது என, யூனியன் கார்பைட் நிறுவனம் சார்பில், நியூயார்க் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் அந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை யிட்டது, யூனியன் கார்பைட் நிறுவனத்தினர் மேலாளர் தான் என்பதற்கான ஆதாரத்தை, எர்த் ரைட்ஸ் தொண்டு நிறுவனம் வைத்துள்ளது.