தமிழக இந்து மதத் தலைவர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதால் அவர்கள் சட்டத்துக்குட்பட்டு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன்சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார்-பரவைநாச்சியார் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ப்பதற்காக வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் இந்து கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் ஆட்சி தான் நடக்கிறது. கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. திருக்கோவில்களின் திருப்பணிகள், விழாக்கள், குடமுழுக்குகள் ஆகிய விழாக்கள் குறித்து மத குருமார்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை.
இந்து கோவில்களில் வரவு, செலவு கணக்குளை பராமரிப்பதற்கு அறநிலையத்துறைக்கு உரிமை உண்டு. ஆனால் எந்த நட்சத்திரத்தில் குட முழுக்கு, தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்து மத குருமார்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.
இதுவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்து சமய மடாதிபதிகள், துறவிகள் ஆகியோரிடம் கோயில்கள் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. அதே நேரத்தில் கிருஸ்தவ மத குருமார்கள் மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களை சந்தித்துள்ளார். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எங்களது கோரிக்கையை எடுத்து சென்றுள்ளோம்.
இலங்கை அரசு இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி குறித்து தரக்குறைவான செய்திகள் வெளியிட்டிருந்தது. கடுமையான எதிர்ப்பின் காரணமாக அச்செய்தி நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரதமர் மோடி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்சதீவை மீட்டு, தனி ஈழம் அமைக்க முழு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்து இயக்க தலைவர்களுக்கு தமிழகத்தில் தொடார்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. எனவே முதல்வர் ஜெயலலிதா பயங்கரவாத நடவடிக்கைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்துத் தலைவர்கள் சட்டத்துக்குட்பட்டு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.