நேபாளத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு: பெரும் அறிவிப்புக்கள் வௌியாக வாய்ப்பு

nepalகாத்மாண்டு: பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார். காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியின் இந்த விஜயத்தின் மூலம், 17 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் நேபாளம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடியை, காத்மாண்டு விமான நிலையத்தில், அந்நாட்டு பிரதமர் சுசில் கொய்ராலா, மற்றும் அமைச்சர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் நோபாள ராணுவம் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார். அப்போது, மிகப் பெரிய தலைவர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்கான 19 குண்டுகள் முழங்கப்பட்டன. நேபாள நாட்டின் வழக்கமான புரோட்டோகால் விதிகளை மீறி, பிரதமர் கொய்ராலா நேரடியாக விமான நிலையத்திற்கே வந்து, பிரதமர் மோடியை வரவேற்றது சிறப்பம்சமாக இருந்தது.

முக்கியமான பயணம்: பிரதமர் மோடியுடன், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் நேபாளம் சென்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் யாரும் இந்த பயணத்தில் இடம்பெறவில்லை. மோடியின் நேபாள பயணத்தின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புக்கள் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் நேபாள விஜயம் குறித்து இந்தியாவிற்கான நேபாள தூதர் கிருஷ்ணா தாக்கல் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் இந்த நேபாள விஜயம் சரித்திர முக்கியம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பலப்பட இந்த பயணம் உதவும்,’ என்றார்.

மோடியின் நேபாள பயணத்தில், எல்லை பாதுகாப்பில் ஒத்துழைப்பு, வர்த்தக முதலீடுகள், புனல்மின் உற்பத்தி மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஒப்பந்தம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. நேபாளம் சென்றுள்ள மோடி, நாளை அங்குள்ள பசுபதிநாதர் கோவிக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

மோடியால் இணையும் குடும்ப உறவு: நேபாள பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிடுகையில், தனிப்பட்ட முறையில் எனது நேபாள பயணம் மிகவும் சிறப்பானது. எனது பயணத்தில் சில உணர்ச்சிமயமான விஷயங்களும் அடங்கியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், ஜீத் பகதூர் என்ற சிறுவனை குஜராத்தில் பார்த்தேன். அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. எங்கே செல்வது, என்ன செய்வது என்று புரியாமல் இருந்தான். அவனுக்கு யாரையும் தெரியவில்லை. அவனால் குஜராத்தி மொழியையும் புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுளின் துணையோடு, அவனை குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். மெதுவாக அவனது கவனம் படிப்பின் மீது செல்ல ஆரம்பித்தது. அவன் விளையாடினான். பின்னர் குஜராத்தி மொழியையும் கற்றுக் கொண்டான். சில நாட்களுக்குப்பின் நேபாளத்தில் அவனது பெற்றோர் இருப்பதை கண்டுபிடித்தோம். தற்போது நான் நேபாளம் செல்லும் போது ஜீத் பகதூரையும் உடன் அழைத்துச் செல்கிறேன். ஜீத் பகதூர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணையப்போகிறான். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜீத் பகதூர் குடும்பத்துடன் மோடி சந்திப்பு:
மோடி குஜராத்தில் இருந்த போது, தனது குடும்பத்தினரை பிரிந்து, குஜராத்தில் சுற்றித்திரிந்த ஜீத் பகதூர் என்ற சிறுவனை கண்டெடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில், சிறுவனது பெற்றோர் நேபாளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மோடியின் நேபாள பயணத்தின் போது ஜீத் பகதூர் அழைத்து செல்லப்பட்டு அவனது குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டான். இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். தனது மகன், இந்திய பிரதமர் உதவியால் மீண்டும் தங்களது குடும்பத்துடன் சேர்ந்தது கண்டு அவனது பெற்றோர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.Click Here

TAGS: