புதுடில்லி,: வர்த்தக ஒப்பந்தத்துக்காக, நம் நாட்டு விவசாயிகளின் நலனை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,” என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:உலக வர்த்தக மையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே, விளைபொருள் வர்த்தகத்தை எளிமையாக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நம் நாட்டின் விவசாயிகளும், ஏழை மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால், ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என, தெரிவித்துள்ளோம். ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தபட்ட நாடுகளுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எந்த காரணத்தாலும், வர்த்தக ஒப்பந்தத்துக்காக, விவசாயிகளின் நலனை விட்டு கொடுக்க மாட்டோம்.
விவசாயிகளின் கவலையை, அரசு உணர்ந்துள்ளது.யு.பி.எஸ்.சி., தேர்வு விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு, தகுந்த நேரத்தில் தகுந்த முடிவை அறிவிக்கும். நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக, அரசு, பல கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான பலன், அடுத்த சில மாதங்களில் கிடைக்கும். நாட்டின் எதிர்கால நலனுக்காக, எந்த ஒரு உறுதியான முடிவையும் எடுக்க, அரசு தயாராக உள்ளது.இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.