தமிழக முதல்வர் பற்றிய அவதூறு சிறீலங்காவிற்கு இந்தியா கடும் கண்டனம்!

timthumbதமிழக முதல்வர் குறித்து சிறீலங்கா இணையத்தளத்தில் வௌியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுரை தொடர்பில், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துகளை பரப்பி கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக டெல்லி மேல்சபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

மேல் சபை கூடிய சிறிது நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இது பற்றிய பிரச்சினையை கிளப்பி சபையின் மைய பகுதிக்கு சென்று கூச்சலிட்டனர்.

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதை கண்டித்தும் சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிராகவும் அவர்கள் கோசமிட்டனர்

இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் 15 நிமிடத்துக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் சபை கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் பிரச்சினை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையை முடக்குவதற்கு அவைத் தலைவர் ஹமீது அன்சாரி கண்டனம் தெரிவித்தார். தொடர் அமளி காரணமாக அவையை 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

பாராளுமன்ற மேலவையிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை கிளப்பினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை கூறும் போது, ‘சிறீலங்கா அரசின் இந்த மோசமான செயலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன’ என்று கேள்வி எழுப்பினார்.

அ.தி.மு.க. உறுப்பினர்களின் அமளியால் சபை 12.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னரும், இதே பிரச்சினை தொடர்பாக அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் ஜெயலலிதா பற்றி வெளியிடப்பட்ட அவதூறு செய்தியானது தமிழக அரசை மட்டுமின்றி இந்திய அரசையே களங்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறீலங்காவின் உயர் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இனியும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் சிறீலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்தில் ஒருமனதாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று மைத்ரேயன் வற்புறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘அ.தி.மு.க. பாராளுமன்ற தலைவர் மைத்ரேயன் எழுப்பியுள்ள இந்த பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இச்சம்பவத்துக்கு இந்தியா பலத்த கண்டனத்தை தெரிவிக்கின்றது. இவ்விகாரம் தொடர்பாக சிறீலங்காவின் உயர் தூதரை அழைத்து அவரிடம் பேசுவோம்’ என்று தெரிவித்தார்.

TAGS: