தமிழ் இனப்படுகொலை குறித்து மோடி அரசுக்கு கிஞ்சிற்றும் கவலையில்லை: வைகோ வேதனை

modi-vaikoஇலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படுவதாக இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தீவில் தமிழினப் பேரழிவை நடத்திய சிங்களப் பேரினவாத ராஜபக்ச அரசின் அருவருப்பான கொடூர கோர முகம், அந்த அரசின் இராணுவ அமைச்சகத்தின் இணையதளம் இந்தியப் பிரதமரையும், தமிழக முதல்வரையும் மிகவும் இழிவுபடுத்தி கருத்துப் படத்துடன் கட்டுரை வெளியிட்டதால், தமிழகத்தில் கட்சி எல்லைகள் தாண்டி பலத்த கண்டனமும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

இச்செய்தியை அறிந்து கொண்ட பிறகும், இலங்கை அரசுக்குக் கண்டனத்தையும், எச்சரிக்கையையும்  தெரிவிக்க வேண்டிய இந்திய அரசு மூன்று நாட்கள் முடங்கிக் கிடந்தது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய போர்க்குரலும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சிகளும், வேறு வழி இல்லாமல் சிங்கள அரசைக் கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒப்புக்குத் தெரிவித்தார். இலங்கை இராணுவ அமைச்சகம் வருத்தப்படுவதாகவும், நேற்றைய தினம் அதிபர் ராஜபக்ச நடந்ததற்கு வருந்துவதாகவும் கண்துடைப்பாக அறிவித்துள்ளனர்.

இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்ட அநீதியை மறைத்து, சிங்கள அரசுடன் இந்திய அரசு வர்த்தக பொருளாதார உறவுப் பாலத்தை அமைக்கும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. இலங்கைக்கு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு நிதியையும் அறிவித்து, அதில் தமிழர்களுக்கும் உதவி கொடுக்கப்படும் என்ற மாய்மால வேலைக்கும் ஏற்பாடு நடக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில், சிங்கள அரசு, தமிழர்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எதையும் நிறைவேற்றியது கிடையாது. தமிழர்களை வதைத்து அடிமை இருளில் நசுக்கியது. சிங்கள அரசு ஒருக்காலும் தமிழின விரோதப் போக்கை மாற்றிக் கொள்ளாது என்பதற்கு நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சம்பவமே எடுத்துக்காட்டு.

2008, 2009 ஆண்டுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், ஏராளமானவர்கள் சிங்கள இராணுவத்தால் கடத்தப்பட்டுக் காணாமல் போனது குறித்தும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் ஏற்பாடு செய்து இருந்த துயர் களைய குறை கேட்கும் நிகழ்ச்சியில், தங்கள் துன்பம் தீர வழி பிறக்குமா? என்ற ஏக்கத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

காணாமல் போனவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? அல்லது வதை முகாமில் சித்திரவதை செய்யப்படுகிறார்களா? என்ற கவலை மேலிட்டவர்களாக அவர்கள் தங்கள் துயரங்களை அக்கூட்டத்தில் பதிவு செய்ய முற்படுகையில், புத்த பிக்குகளின் தலைமையில் வன்முறையாளர்கள் கூட்டத்தில் புகுந்து கலவரம் செய்துள்ளனர். மனிதாபிமானத்துடன் விசாரணை நடத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இதனால் அந்தக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.

துயர் கேட்கும் கூட்டத்தில், கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் குண்டர்களுக்கு இலங்கை அரசின் காவல்துறையினர் ஆதரவாகவே நடந்து கொண்டனர். இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயக அடிப்படையான பேச்சு உரிமைக் கூட்டம் நடத்துவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் வழங்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும் என்றும், இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாணத்தில் இருந்து வந்த தமிழர்கள் பத்திரமாக ஊர் திரும்ப பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது

இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகள் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

இந்த நாடுகளில் எல்லாம் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் கோடிக் கணக்கில் குடிமக்களாக இல்லை. ஆனால், இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களின் இரத்த உறவுகள் ஏழரைக் கோடிப் பேர் வாழ்கிறோம்.

இலங்கைத் தீவில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படுவதாகக் காணோம்.

2009ல், நெஞ்சை உலுக்கும் கொடூரப் படுகொலைகளைச் சிங்கள அரசு நடத்தியது குறித்து ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மார்சுகி தாருஸ்மன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தபோது, ‘பான் கீ மூன் அனைத்துலக விபச்சாரத் தரகர்’ என்று எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கியவாறு, சிங்கள அமைச்சர் தலைமையில் கொழும்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அவரது உருவ பொம்மையும், ஐ.நா. அடையாளங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் என்று ராஜபக்ச ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். குற்றவாளியையே நீதிபதியாக்கும் அந்த ஆணையம், சிங்கள அரசுக்கு ஆதரவாகவே அறிக்கை தந்தது.

2013 ல் ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் பெரும்பான்மை நாடுகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக, மனித உரிமை ஆணையர் இலங்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அறிவித்தார்.

ஃபின்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்து நாட்டின் முன்னாள் நீதிபதி சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தானின் மனித உரிமை ஆணையத் தலைவர் அஸ்மா ஜகாங்கீர் ஆகிய மூவர் குழுவினர், இலங்கைக்குள் விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ராஜபக்ச அரசு அறிவித்து விட்டது.

மனித உரிமைக் கவுன்சிலையும், ஐ.நா. மன்றத்தையும் கிள்ளுக் கீரையாகச் சிங்கள அரசு நினைக்கிறது. மீண்டும் உலகத்தை ஏமாற்றும் நோக்கத்தோடு, தானே ஒரு விசாரணைக் குழுவை ராஜபக்ச இப்பொழுது அறிவித்துள்ளார். இந்த விசாரணைக் குழுவினால் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களைப் பற்றிய எந்த உண்மையும் வெளிவராது.

உலகத்தில் எத்தனையோ இனங்கள் அழிவுகளையும், அவலங்களையும் அடக்குமுறையாளர்களால் அனுபவித்த போதும், அதற்கெல்லாம் உரிய நீதியை பல்வேறு கட்டங்களில் அனைத்துலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் வழங்கி வந்துள்ளன. ஆனால், ஈழத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் நாதியற்றுப் போனார்களா? நானிலத்தில் அவர்களுக்கு நீதியே கிடையாதா? என்ற கேள்விகள் விசுவரூபம் எடுக்கின்றன.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசின் கொடுஞ்செயல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவினருக்கு இந்திய அரசு விசா அனுமதி மறுத்தது மன்னிக்க முடியாத குற்றம் மட்டும் அல்ல, ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாகச் செயல்படுகிற குற்றமும் ஆகும்.

புண்ணுக்குப் புனுகு பூசி விடலாம், இலட்சக்கணக்கான தமிழர்கள் மண்ணுக்குள் புதைந்தது போல் நீதியும் புதைந்து போகட்டும், காலம் அனைத்தையும் மறக்கடித்து விடும் என்ற மனோநிலையில், இந்திய அரசின் போக்கு குறிப்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் போக்கு அமைந்திருக்கிறது.

பலியான தமிழ் உயிர்களும், சிந்தப்பட்ட இரத்தமும், கொட்டப்பட்ட கண்ணீரும், பறிபோகும் தமிழர் தாயக நிலங்களும் உலகின் மனசாட்சியை உசுப்ப, உயிர்கொடை தந்த முத்துக்குமார்களின் தியாகமும் ஒருபோதும் வீண்போகாது.

தாய்த் தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும், உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களும் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்களைக் கூண்டில் நிறுத்தவும், இருளின் பிடியில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியான விடியல் கிடைக்கவும் உறுதி கொள்வோம் என்று கூறியுள்ளார்.

TAGS: