புதுடில்லி : இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார குற்றங்கள் காரணமாக டில்லிக்கு வர வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகள் மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
டில்லியில் குதுப்மினார், ஹிமாயூன் ஸ்தூபி, செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைந்துள்ளது என இந்திய தொல்பொருள் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. முக்கிய சுற்றுலா தலங்களில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய பாரம்பரிய சுற்றுலா தலங்களில் இந்தியங்களை விட வெளிநாட்டினர்களே அதிகம் வருகின்றனர்.
2010ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் டில்லிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது. ஆனால், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, 2013-14ம் ஆண்டில் டில்லிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு அடுத்தடுத்து வெளியான பாலியல் குற்றங்களின் காரணமாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக டில்லியை கருதுவதாகவும், அதனால் அங்கு செல்ல விரும்பவில்லை எனவும் வெளிநாட்டினர் கூறுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் வருவாய் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், டில்லியை பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அடுத்த ஆண்டு அறிவிக்க உள்ள நிலையில் வெளிநாட்டினரிடம் நிலவி வரும் டில்லி பற்றிய கருத்து மத்திய அரசை கவலை அடையச் செய்துள்ளது. தாஜ்மஹால் போன்ற முக்கிய இடங்கள் மட்டுமின்றி ஜந்தர் மந்திர் உள்ளிட்ட டில்லியின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. டில்லிக்கு பதிலாக மற் நகரங்களை பார்ப்பதற்கே சுற்றுலா பயணிகள் விரும்புவதாகவும், டில்லிக்கு ஒரு பெண் தனியாக வருவது மிகவும் கடினம் என அவர்கள் விரும்புவதாக தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பு காரணமாக தொழிற்சாலைகளில் இரவு பணிகளில் பெண்கள் நியமிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதற்காக தொழிற்சாலை நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும், இதற்கான மசோதாவை அரசு தயாரிக்க வேண்டும் எனவும் லோக்சபாவில் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் காரணமாக பகலில் மட்டுமே பெண்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.