காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று பாஜகவின் புதிய தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவையில், மத்திய உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்றதைத் தொடர்ந்து, தான் வகித்து வந்த பாஜக தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். பின்னர் கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி பாஜகவின் புதிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில், அமித் ஷா முறைப்படி அக்கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
நாட்டின் அரசியலில், பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமே, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது பாஜகவின் சித்தாந்த்தை பரப்புவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்க வேண்டும். இதற்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதை தங்களது மனத்தில் கொண்டு கட்சித் தொண்டர்கள் செயல்பட வேண்டும். 2014ஆம் ஆண்டில், புதிய பாதையில் கட்சி செல்லத் தொடங்கியுள்ளது. நாட்டில் நீண்ட காலம் பாஜக ஆட்சி செலுத்த வேண்டுமானால், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மத்திய அமைச்சர்கள் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், பாஜகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தேவையான இடங்களைக் கூட காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மோடி, ராஜ்நாத்துக்கு பாராட்டு: மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற பிரமிக்கத்தக்க வெற்றிக்கு நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங்கின் இரட்டைத் தலைமையே காரணமாகும். மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியால், எதிர்காலத்தில் கட்சிக்குத்தான் சவால் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய காலங்களில், காங்கிரûஸ எதிர்த்து பிற கட்சிகள் அரசியல் செய்தன. ஆனால் இனிமேல், பாஜகவை எதிர்த்து பிற கட்சிகள் அரசியல் செய்யும்.
மக்களவைத் தேர்தலில், பாஜக பெற்ற வெற்றியானது காங்கிரஸ் சகாப்தத்தின் முடிவடைவதற்கான தொடக்கமே ஆகும். மக்களவைத் தேர்தல் முடிவானது, குடும்ப ஆட்சி, திருப்திப்படுத்தும் கொள்கை, வாக்குவங்கி அரசியல் ஆகியவை மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
மத்தியில் தனது சொந்த பலத்தில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. எனவே கட்சியின் பணி, தற்போது மாறியுள்ளது. இதற்கேற்ப கட்சியினரின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக கட்சியினர் செயல்பட வேண்டும். தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்த மாநிலங்களில் கட்சி அமைப்பு பலவீனமாக உள்ளதால், கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை தேர்தலில் வாக்குகளாக மாற்ற முடியவில்லை.
4 மாநிலத் தேர்தல்: ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, மகாராஷ்டிரம். ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் பாஜக தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவதை கட்சியினர் உறுதி செய்ய வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. இதற்கு மாநிலத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசின் பாரபட்சமான செயல்பாடுகளே காரணமாகும். பிகாரில் லாலு பிரசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமார் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது அவர், லாலுவுடன் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகிறார். இந்த நேர்மையற்ற கூட்டணியை நாம் மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்: அத்வானி
“”மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, பாஜகவிடம் இருந்து நாட்டு மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆதலால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் செயல்பட வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிவுறுத்தினார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
மத்திய அமைச்சர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள், நாட்டு மக்களிடம் அவர்கள் எத்தகைய முறையில் தொடர்பு வைத்துள்ளனர் என்பதை வைத்து கட்சி மதிப்பிடப்பட மாட்டாது. பொது மக்களிடம் கட்சித் தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்துதான் கட்சி மதிப்பிடப்படும்.
இன்றைய கூட்டத்தில் பேசியவர்கள், பொறுப்பு, கடமையை உணர்ந்து பேசினார்கள். தேர்தலில் பெற்ற வெற்றிக்காக ஆணவத்துடன் யாரும் பேசவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக 272-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மத்தியில் முன்பு ஆட்சி செலுத்திய கட்சியோ வெறும் 44 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. சில மாநிலங்களில் அக்கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. (காங்கிரûஸ பெயர் குறிப்பிடாமல் இவ்வாறு தாக்கிப் பேசினார்).
பாரதீய ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய, ஆர்எஸ்எஸ் முன்னாள் மறைந்த தலைவர் கோல்வால்கர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரே பாஜகவை வடிவமைத்தவர்கள் ஆவர். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கொண்ட தொடர்பால் பாரதீய ஜனசங்கம் வெறும் அரசியல் கட்சியாக மட்டுமன்றி, சித்தாந்தமாகவும் பார்க்கப்பட்டது. மற்ற கட்சிகளில் இருந்து வித்தியாசமான கட்சி எனப் பெயர் பெற்ற பாஜக, பின்னர் வித்தியாசங்கள் (கருத்து வேறுபாடுகள்) நிறைந்த கட்சி பாஜக என்று கேலி பேசப்பட்டது. இது, கட்சித் தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது என்று அத்வானி பேசினார்.