உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசமா? மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சமரசம் செய்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வர்த்தகத்துறை அமைச்சருமான ஆனந்த் சர்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் குழுக்கூட்டத்தில் மோடி பேசும்போது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வரப்போவதாக தெரிவித்து, விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களை உலக வர்த்தக அமைப்புடன் செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சமரசம் செய்து கொண்டதாக அவர் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறிய கருத்துகள், நாடாளுமன்றத்தில் கடந்த 5 மற்றும் 6ஆம் தேதிகளில் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. நாட்டு மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக இதுபோல் மோடி கூறியுள்ளார். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) எழுப்பும். இந்த விவகாரம் தொடர்பாக மோடி தெரிவிப்பது உண்மையா? அல்லது மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் தெரிவிப்பது உண்மையா? என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பும்.

உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை உரிமை சம்பந்தப்பட்டதாகும். இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு மாநாட்டின் முன்வைக்கப்பட்ட திட்டத்தில் உணவு பாதுகாப்பு குறித்து எந்த கருத்தும் குறிப்பிடப்படவில்லை.

அந்த மாநாட்டில், உணவு தானியங்களை இருப்பு வைக்கும் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இந்தியா அடிபணியவில்லை.

ஆதலால் உணவு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பு, பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுத்தது என்பதை மோடி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் அவருக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவரே பொய்யான விவரங்களை பேசியிருக்க வேண்டும் என்று ஆனந்த் சர்மா கூறினார்.

TAGS: