வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கியிடம் அருண் ஜேட்லி வலியுறுத்தல்

  • புது தில்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.
    புது தில்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.

பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், வட்டி விகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டம் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொண்டு பேசினார். பொருளாதாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போதே, பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து நிதி அமைச்சகத்தின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கிதான் தீர்மானிக்க வேண்டும். நிதி நிலை, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் என்று நான் நம்புகிறேன்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார் அருண் ஜேட்லி.

ரிசர்வ் வங்கி கவர்னர்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உடனிருந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பொருளாதார நிலை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் அமைகின்றன. இப்போதைக்கு, நிர்ணயித்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்றார் ரகுராம் ராஜன்.

நிர்வாகக் குழுக் கூட்டம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தியது. அத்துடன், சர்வதேச, உள்நாட்டு அளவில் வரக் கூடிய சவால்கள், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பணவீக்கத்தைக் குறைக்கவும் அரசின் திட்டக்கொள்கைகளை தொடர்ந்து சீரமைத்து வருவதாக நிதி அமைச்சர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, 5 சதவீதத்துக்கும் குறைவான பொருளாதார வளர்ச்சியே இருந்து வரும் நிலையில், சமாளிக்கத்தக்க நிதிப் பற்றாக்குறை அளவு இருக்குமாறும் அரசு திட்டமிட்டு வருகிறது.

குடும்ப சேமிப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக, வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கவும் விவசாயத் துறையை மேம்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதித் துறையில் அனைவரையும் உள்படுத்திய வளர்ச்சிக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையின்போது அறிவிப்பார் என்று அருண் ஜேட்லி தெரிவித்ததாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “திட்டமிட்டபடி பொதுத் துறை பங்கு விற்பனை’

பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், இந்தாண்டு ரூ.58,425 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் விவகாரத்தில், பங்குகள் விற்பனைத் துறையால் (டி.ஓ.டி.) ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி., என்.ஹெச்.பி.சி. உள்ளிட்ட நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இதுதவிர்த்து செயில் (எஸ்.ஏ.ஐ.எல்.) நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளையும், ராஷ்ட்ரீய இஸ்பத் நிகாம் (ஆர்.ஐ.என்.எல்.), ஹால் ஆகிய நிறுவனங்களில் 10 சதவீத பங்குகளையும் நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. “டையர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை உடனடியாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஜிங்க், பால்கோ ஆகிய நிறுவனங்களில் இருக்கும் அரசு பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அருண் ஜேட்லி கூறினார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.43,425 கோடியும், பிற அரசு நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 கோடியும் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2013-2014ஆம் நிதியாண்டில் ரூ.40,000 கோடி திரட்டஇலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.15,820 கோடி மட்டுமே திரட்டப்பட்டது. இதேபோல, 2012-2013ஆம் நிதியாண்டில் ரூ.23,957 கோடியும் (இலக்கு நிர்ணயம் ரூ.30,000 கோடி), 2011-2012ஆம் நிதியாண்டில் ரூ.13,894 கோடியும் (இலக்கு நிர்ணயம் ரூ.40,000 கோடி) திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: