சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸýக்கு நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விருதை ஏற்க மறுத்துள்ள நேதாஜி குடும்பத்தினர், முதலில் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கொல்கத்தாவில் நேதாஜியின் பெயரன் சந்திர குமார் போஸ் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நேதாஜி கடந்த 1945ஆம் ஆண்டு காணாமல் போனார். அவரது உயிரிழப்புக்குப் பிறகு மத்திய அரசு “பாரத ரத்னா’ விருதைக் கொடுக்க விரும்பினால், அவர் எப்போது உயிரிழந்தார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதற்கான ஆதாரம் எங்கே?
இந்த விருதின் மூலம் நேதாஜிக்கு பெருமை சேர்க்க விரும்பினால், அவரின் உயிரிழப்பு குறித்த அரசு ஆவணங்கள் மீண்டும் வகைப்படுத்தப்பட வேண்டும்.
அதன் மூலம் அவர் காணாமல் போனதற்கான மர்மம் வெளிவரும்.
எங்களது குடும்ப உறுப்பினர்கள் 60 பேரிடமும் பாரத ரத்னா விருது தொடர்பாக பேசினேன். நேதாஜி சார்பில் இந்த விருதை ஏற்க யாரும் தயாராக இல்லை. அனைவரும் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தைக் கண்டுபிடிக்கும் வரை, இது நேதாஜிக்கு பொருத்தமான விருதாக இருக்காது எனக் கருதுகின்றனர் என்று சந்திர குமார் தெரிவித்தார்.
முன்னதாக, நேதாஜி காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேதாஜியின் குடும்பத்தினர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர்.
வாய்பாய்க்கு பாரத ரத்னா?இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பாரத ரத்னா விருதுக்கு 5 பதங்கங்களை தயாரிக்குமாறு ரிசர்வ் வங்கியின் நாணய தயாரிப்பு பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு விருதுப் பட்டியலில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
எனினும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.