இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் விற்பதில் அமெரிக்கா முதலிடம்: அருண் ஜேட்லி

இந்திய ராணுவத்துக்கு ராணுவத் தளவாடங்கள் விற்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் ராணுவத் தேவைக்காக ரூ.83,458 கோடி மதிப்பிலான தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ளது.

இதில் ரூ.32,615 கோடி மதிப்பிலான தளவாடங்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டன. அதே காலகட்டத்தில், ரஷியாவிடம் இருந்து ரூ.25,363.96 கோடி மதிப்பிலான தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. நீண்டகாலமாக நமக்கு ராணுவத் தளவாடங்களை ரஷியா வழங்கி வருகிறது. இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள முக்கியப் போர் தளவாடங்களில் 70 சதவீதம் ரஷிய தயாரிப்புகள்தான்.

இவற்றுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் இருந்து ராணுவத் தளவாடங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனிடையே, ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிக்கும் முடிவு குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார் அருண் ஜேட்லி.

TAGS: