துணை சபாநாயகர் பதவியும் அம்போ?: பார்லி.,யில் காங்கிரசின் பரிதாபம்

thambiduraiபுதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவியைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவியையும் பறிகொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பா.ஜ., வால் முன்மொழிப்பட்டுள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வென்றது. பா.ஜ., மட்டும் தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் கிடைத்தது என்னவோ வெறும் 44 இடங்கள் தான். 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. தோல்வி குறித்த எண்ணம் இருந்தாலும், காங்கிரஸ் இந்த அளவிற்கு மோசமாக தோற்கும் என அக்கட்சியிலுள்ள யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக கட்சியின் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுலால் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு போராட்டம்:

லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவியைப் பெற, 10 சதவீத இடங்கள் தேவை என்ற நிலையில், தேவையான 54 இடங்களைக் கூட பெற முடியாமல், அதற்கும் 10 இடங்கள் குறைவாக 44 இடங்களிலேயே காங்கிரசால் வெற்றி பெற முடிந்துள்ளது. லோக்சபாவில் 3வது இடம் பெற்றுள்ள அ.தி.மு.க.,வை விட காங்கிரஸ் பெற்ற இடங்கள் வெறும் 7 மட்டுமே அதிகம். இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவி 2வது பெரிய கட்சி என்ற தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என பல முறை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டும், அவை அனைத்தும் விழலுக்கு இறைந்த நீரானது. காங்கிரசின் கோரிக்கையை லோக்சபா சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார்.

துணை சபாநாயகர்:

லோக்சபா துணை சபாநாயகர் பதவி பெரும்பாலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது அந்த பதவியும் காங்கிரசின் கையை விட்டு சென்று விட்டது. இந்த பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியிடமோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளுக்கோ லோக்சபாவில் எந்த பலமும் இல்லை.லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை போட்டியின்றி தேர்வு செய்யும் பணியில், பார்லி.,விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஈடுபட்டார். இதன் மூலம் ராஜ்யசபாவில் அ.தி.மு.க.,வின் 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாம் என்பது பா.ஜ.,வின் கணக்கு. தற்போதைய சூழலில், 250 உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபாவில் பா.ஜ., வசம் 46 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த இன்சூரன்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை உயர்த்துவது மற்றும் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற முடியவில்லை. இந்நிலையில், அ.தி.மு.க.,வின் ஆதரவு பா.ஜ.,வுக்கு கூடுதல் தெம்பை தரலாம். தற்போதைய நிலையில், லோக்சபாவில் என்ன நடந்தாலும், நடப்பவற்றை கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

TAGS: