மது அரக்கனை ஒழிக்கும் நாளே உண்மையான விடுதலை நாள் : ராமதாஸ்

மது அரக்கனை முற்றிலும் ஒழிக்கும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று சுதந்திர தினத்தை முன்னிட்ட  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள விடுதலை நாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் 68-ஆவது விடுதலை நாள்விழாவை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த விடுதலை நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன? என்பதை ஆராய்ந்து பார்த்தால், நாம் பெற்றதைவிட இழந்தது தான் அதிகமாக இருக்கிறது. அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாம் முன்னேறியிருக்கிறோம்; நிலவுக்கு சந்திராயனையும்,செவ்வாய்க்கு மங்கள்யானையும் அனுப்பியிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. ஆனால், பசியும், வறுமையும் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதும், மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் கொள்கைகளால் கோடீஸ்வரர்கள் பெருங்கோடீஸ்வரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனையையும், தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது.

தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், காவிரியாக இருந்தாலும், முல்லைப்பெரியாறாக இருந்தாலும் தமிழகத்திற்கான உரிமைகள் மட்டும் அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. மது ஒழிக்கப்படும் வரை மக்களுக்கு முன்னேற்றமோ, நாட்டிற்கு வளர்ச்சியோ ஏற்படாது என்ற உண்மையை அறிந்திருந்தும், மதுக்கடைகளை மூட முடியாது; மக்களைக் காட்டிலும் மதுவால் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம் என தமிழக அரசு அறை கூவல் விடுக்கிறது.

பசி, வறுமை, வன்முறை, ஏழை பணக்காரன் பாகுபாடு , இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணமான மது ஆகியவை ஒழிக்கப்படும் நாள் தான் நமக்கு உண்மையான விடுதலை நாள் ஆகும். எனவே, மது அரக்கனை ஒழிக்கவும், மக்களின் துயரங்கள் விலகவும், நாடு முழுவதும் அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை தழைத்தோங்கவும் இந்த நன்நாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

TAGS: