மக்கள் தொகைதான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: அப்துல்கலாம்

abdul kalamசென்னிமலை அடுத்த மயிலாடியில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மரம் நடும் விழா மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த விழாவில் அரசு தொழில்நுட்ப கல்வி இயக்க கூடுதல் இயக்குனர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்., தாளாளர் மக்கள் ராஜன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு பேசியபோது, ’’எந்த ஒரு சக்தியை விட மன எழுச்சி கொண்ட இளைஞன் தான் மிகப்பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. எனவே, மக்கள் தொகை இந்தியாவுக்கு மிகப்பெரிய சொத்து.

ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவை பெற, அதை தேடிச் சென்றடைய வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

கற்றல் கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது. சிந்தனை திறன் அறிவை வளர்க்கிறது. அறிவு நம்மை மகானாக்குகிறது. கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும்.

இளைஞர்கள் தோல்வி மனப்பான்மையில் இருந்து, தவறான செய்திகளில் இருந்து, ஊழல் சிந்தனையில் இருந்து, நம்பிக்கையின்மையில் இருந்து விடுபட்டு தங்களது லட்சியம் வெற்றி பெற கனவு காண வேண்டும். அப்படிப்பட்ட கனவை ஒவ்வொரு இளைஞர்களின் மனதில் விதைக்க வேண்டும்.

நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் சிந்தனை வளர்க்கும் திறனை தூண்ட வேண்டும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை பெறுவார்கள்’’என்று தெரிவித்தார்.

TAGS: