குற்ற வழக்கில் தொடர்பிருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது: மோடி அரசின் அடுத்த அதிரடி

narendra_modizபுதுடில்லி : குற்ற வழக்கில் தொடர்புடையதாக குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்படும் நபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆளும் பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான மசோதாவை பார்லிமென்ட்டில் நிறைவேற்றியதை அடுத்து தேர்தல் நடைமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் மோடி அரசு இறங்கி உள்ளது.

நாட்டின் முக்கியதுறைகளில் களை எடுக்கும் பணியை துவக்கி உள்ள மத்திய அரசு, முதல் கட்டமாக நீதிபதிகள் நியமனத்தில் நடைபெறும் குளறுபடிகளை நீக்குவதற்காக நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டவரைவு மசோதாவை கடந்த வாரம் பார்லி.,யில் தாக்கல் செய்தது.

பார்லி.,யின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், முதல் நடவடிக்கையில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தால் அடுத்தகட்டமாக தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்துள்ளது. சட்ட கமிஷனின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மத்திய அரசு, ஒப்புதல் கிடைத்த உடன் நடவடிக்கையில் இறங்க உள்ளது.

தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான அறிக்கையை சட்ட கமிஷனிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான இந்த அறிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அக்டோபர் மாதம் சட்ட கமிஷனின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசு, சட்டக்குழுவிடம் அளித்துள்ள அறிக்கை, ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், உ.பி.,யின் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

இ தே போன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கும் உ.பி.,யில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இதனால் இவர்கள் போட்டியிட்ட ஏதாவதொரு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இந்த கூடுதல் செலவையும், சிரமத்தையும் குறைப்பதற்காகவும், இந்த விவகாரம் பெறும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாலும், இந்த தடை விதிக்க சட்டக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடூர குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்ட கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதே கருத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டிலும் சட்ட கமிஷன் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை துணை நீதிமன்றத்திடம் ஒப்படைத்த சுப்ரீம் கோர்ட், அந்த வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக பிப்ரவரி மாதம் சட்ட கமிஷன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விசாரணை பல ஆண்டுகள் நடத்தப்படுவதால், குற்றத்திற்கான தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், இதனால் குற்றம்சாட்டப்பட்டவர்களை 3 முறைகளின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளதாக சட்ட கமிஷன் தலைவர் ஏ.பி.ஷா தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா உறுப்பினர்களில் 160க்கும் மேற்பட்டவர்கள் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS: