மாநிலங்களுக்கு தனி ஏற்றுமதி கவுன்சில்: மோடி

மாநிலங்கள் அனைத்தும் தங்களுக்கென்று ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில்களை அமைக்க விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம்,  மும்பையை அடுத்த நவ சேவா பகுதியில் 277 ஹெக்டேர் பரப்பில், ரூ.4,000 கோடி முதலீட்டுடன் ஜவாஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழக சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்துக்கு மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். அதன் பின், அங்கு கூடியிருந்தவர்களிடையே அவர் பேசியதாவது:

ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மாநில அரசுகளுடன் நாங்கள் (மத்திய அரசு) இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. அதேசமயம், ஏற்றுமதியை மேம்படுத்த மாநில அரசுகளும் தனிப்பட்ட முறையில் கடுமையாகப் பாடுபட வேண்டியுள்ளது.

ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அடையாளம் காண்பதற்காக, மத்திய அரசு சமீபத்தில் மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

பிராந்திய அளவில் உலக வர்த்தகத்தை மேற்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில், மாநிலங்கள் தங்களுக்கென்று ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில்களை அமைப்பதற்கான உரிமை விரைவில் வழங்கப்படும்.

ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநிலங்கள் தங்களுக்குள் போட்டியிட வேண்டும். வெளிநாடுகளில் தங்கள் சந்தையை விரிவுபடுத்துவதில் அவை கவனம் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் ஏராளமான சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டங்கள் தடைபட்டுள்ளன. இதற்கான பிரச்னைகளை ஆராய்ந்து, விரைவில் தீர்ப்பதற்காக உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் அமைந்துள்ள இந்தச் சிறப்புக் குழுவானது இப்பிரச்னைக்குத் தீர்வைத் தெரிவிக்கும்.

ஏற்றுமதி மேம்பாட்டில் உற்பத்தியாளர்களை நாம் இணைக்காத வரை, மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து பணியாற்றாத வரை, நம்மால் ஏற்றுமதியில் புதிய சாதனைகளைப் படைக்க முடியாது என்றார் மோடி.

TAGS: