மத்திய அரசின் நூறு “நவீன நகரங்கள்’ அமைக்கும் திட்டத்தின் கீழ் தில்லி, மும்பை தொழிற்பேட்டை பகுதிகளை ஒட்டி “லிட்டில் சிங்கப்பூர்’ பகுதியை அமைப்பதற்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
அவர் தனது துறை உயர் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை இரவு சிங்கப்பூர் வந்தார்.
அங்கு அந்நாட்டுப் பிரதமர் லீ சியன் லூங், வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்து சுஷ்மா பேச்சு நடத்தினார். அத்துடன் அந்நாட்டு முன்னாள் பிரதமர் கோ சாக் டாங்குடன் பேச்சு நடத்தினார்.
அந்த சந்திப்பின்போது, 100 “நவீன நகரங்கள்’ அமைக்கும் இந்திய அரசின் திட்டம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார்.
திட்டம் குறித்து கேட்டறிந்ததை அடுத்து, அந்நாடு நிபுணத்துவம் பெற்றுள்ள “நீர் மேலாண்மை’ மற்றும் “நகரத்தை புதுப்பித்தல்’ போன்ற பகுதிகளில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க சிங்கப்பூர் ஆர்வமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“நவீன நகரம்’ அமைக்கும் திட்டத்தில், நகரங்களை நிர்வகிப்பதற்கான தகவல் தொழில்நட்பம், பொதுமக்கள் குடியிருப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு உள்பட திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் திட்டம் ஆகியவற்றில் இந்தியாவுடன் சிங்கப்பூர் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.
ரூ.7,060 கோடி செலவில் 100 “நவீன நகரங்களை’ அமைக்கும் திட்டத்தை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உறுதி: இதனிடையே, சிங்கப்பூர்-இந்தியா இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய துறைகளில் ஒப்பந்தங்களை அதிகரிக்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மேற்கொண்ட சந்திப்பின்போது, இருதரப்பு ஒட்டுமொத்த உறவுகள் உள்பட, வான், கடல்வழித் தொடர்பு, கடலோர மேம்பாடு ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இடையே சந்திப்பை விரைந்து ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
“விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் (சிஇசிஏ) இரண்டாவது மதிப்பீடு விரைவில் முடிவடையும் என்று இருதரப்பு வெளியுறவு அமைச்சர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்’ என்று சந்திப்பை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் “விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம்’ (சிஇசிஏ) சிங்கப்பூர், இந்தியா இடையே கையெழுத்தானதை அடுத்து, இரு நாடுகளிடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2003-04 காலகட்டத்தில் ரூ.2.55 லட்சம் கோடியாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2013-14 காலகட்டத்தில் ரூ.11.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
மோடி பேச்சுக்கு வியப்பு: இதனிடையே, சுதந்திர தினத்தில் மோடி ஆற்றிய உரைக்கு சிங்கப்பூர் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மோடியின் பேச்சு குறித்த தங்களின் ஆர்வத்தையும், வியப்பையும் சுஷ்மா ஸ்வராஜிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.