மானியத்தை ரத்து செய்ய வேண்டியது அவசியம்: அருண் ஜேட்லி

பல்வேறு திட்டங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்து, அதன் சுமையைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியத்தால், அதன் சுமை அதிகரித்து வருகிறது. எனவே மானியங்களுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்வதன் மூலம் அந்தச் சுமையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான நிதியை அரசு ஒருபோதும் ரத்து செய்யாது.

கடனை அரசு தள்ளுபடி செய்வதால், அரசு கஜானா காலியாவதுடன் பொருளாதார ஒழுக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.

இதனால் மானியம் வழங்குவது, நாட்டுக்கோ அல்லது பொருளாதாரத்துக்கோ நல்லதல்ல. அரசு மானியத்தை நானும் பெற்று வருகிறேன். ஆனால் அதுபோன்ற மானியங்களை பெரும் உரிமை எனக்கு கிடையாது என்று நம்புகிறேன்.

தொழிலதிபர்கள், ஏழைகளுக்கு ஆதரவான அரசு: அதிக அளவில் வரி விதிக்கப்படுவதை மத்திய அரசு ஆதரிக்கவில்லை. அதேசமயம், ஒரே நேரத்தில் தொழிலதிபர்கள், ஏழைகளுக்கு ஆதரவானதாக மத்திய அரசு இருக்கும். தொழிலதிபர்களுக்கு ஆதரவான அரசாக இருப்பதில் எந்த தவறும் கிடையாது.

ஏனெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவு முதலீடு வேண்டும். அப்போதுதான் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு வருவாயும் அதிகரிக்கும்.

அரசுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்றால், நாட்டில் உள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஏழைகளுக்கான நலத்திட்டங்களையும் அரசால் செயல்படுத்த முடியாது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது குற்றச்சாட்டு: மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த அரசு பின்பற்றிய வரி விதிப்புக் கொள்கை, முதலீட்டாளர்கள் இடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுபோன்ற அதிகப்படியான வரிக் கொள்கையால், நமது நாட்டின் மீது முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்து ஏற்பட்டு விடும்.

அதேபோல வரி விதிப்புக் கொள்கை வலுவற்றதாக இருந்தால், உண்மையான பொருளாதார, வரி விதிப்புக் கொள்கையின் நோக்கங்கள் நிறைவேற முடியாது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் நமது நாட்டை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்றுள்ளது.

சேமிப்பு அளவு குறைந்துள்ளது: குறைவான சேமிப்புக்கு, பணவீக்கத்தின் அளவு அதிகரித்திருப்பதே காரணம் ஆகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் கடந்த ஆண்டு சேமிப்பு அளவு 33 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைந்து விட்டது.

ஆகையால் சேமிப்பை ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சேமிப்பு அதிகரித்தால்தான், அதனை முதலீட்டாக மாற்ற முடியும்.

திட்டக் குழுவை ரத்து செய்யும் அறிவிப்புக்கு வரவேற்பு: திட்டக் குழுவை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

மத்திய அரசால் எடுக்கப்படும் முடிவை தீர்மானிக்கும் அதுபோன்ற கட்டளையிடும் அமைப்பு நமக்கு தேவையில்லை.

நாட்டின் வளங்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று தீர்மானிக்கும் அதிகாரம், அனைத்து மாநிலங்களுக்கும் இருக்க வேண்டும்.

நாட்டில் தற்போது பணவீக்கத்தின் அளவு அதிகமாகவும், வளர்ச்சியின் அளவு குறைவாகவும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

இதுபோன்ற நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். இல்லையென்றால், இந்த நிலையை சரிசெய்வது மிகவும் கடினமாகி விடும் என்று அருண் ஜேட்லி கூறினார்.

TAGS: