மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண பேச்சுவார்த்தை: எச்.ராஜா

மீனவர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி உறுதியான முடிவெடுக்கும் என்று பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் அகில இந்திய செயலர்களில் ஒருவராக எச்.ராஜா தேர்வு செய்யப்பட்ட பின், காரைக்குடிக்கு திங்கள்கிழமை வந்தார். அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்று, சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

என்னை பா.ஜ.க. தேசியச் செயலராக நியமித்ததற்காக, அகில இந்தியத் தலைவருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோடி தலைமையிலான அரசு, பொறுப்பேற்று 80 நாள்களாகிய நிலையில், மக்களுக்கு இந்த அரசு மிகப் பெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் தமிழக மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், மீனவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. தற்போது, மோடியின் பேச்சுவார்த்தை காரணமாக மிகப் பெரிய மாற்றம் வந்துள்ளது.

இன்றைய நிலையில் ஓர் இந்திய மீனவர் கூட இலங்கைச் சிறையில் இல்லை. ஓர் இலங்கை மீனவர் கூட இந்தியச் சிறைகளில் இல்லை. மேலும், மீனவர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு இந்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பிரேசில், இந்தியா, சீனா போன்ற பிரிக்ஸ் நாடுகளுடன் நல்லுறவு வளர்ப்பது, இந்தியா தலைமையேற்க பிரிக்ஸ் வங்கி தொடங்குவது போன்ற மோடியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, சர்வதேச அரங்கில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தை எப்படிக் குறைப்பது என்ற நோக்கில் பிரதமர் செயல்படுவது புலனாகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுகவை தோற்கடிக்கவே மாறி, மாறி மக்கள் வாக்களிக்கின்றனர். வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான் போட்டி. கடந்த தேர்தலில் 7 தொகுதிகளில் இக் கூட்டணி முதலிடம் பெற்றது. 60 தொகுதிகளில் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

எனவே, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மோடி அரசின் சாதனைகளை வேட்பாளர்கள், மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் பிரசாரம் செய்தால் பா.ஜ.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

தமிழக பேரவைத் தேர்தல் கூட்டணி பற்றி தலைமைதான் முடிவு செய்யும். அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. ஆளும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்குப் பதிலாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் கிடைக்கும். இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து சமீபத்தில் தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழகத்தைச் சேர்ந்த ஐவர் குழு, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், நான் (எச். ராஜா), இன்றைய மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மோகனராஜுலு ஆகியோர் பேசினோம்.

இதில், ரூ.60 ஆயிரம் கோடியில் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக கட்டப்பட்டுவரும் வீடுகள், சேதமடைந்த சாலைகள், ரயில் பாதைகள் போன்றவை குறித்தும் கடந்த 4-ஆம் தேதி விவாதித்தோம். அப்போது, முதலில் 2 நாடுகளுக்கும் உள்ள துன்ப நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. இதனால் ஒரு  துப்பாக்கிச் சூடுகூட நடக்கவில்லை. இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு, இலங்கை அரசோடு பேசி, உறுதியாக இறுதி முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றார் எச்.ராஜா.

TAGS: