மோடி சொன்ன சொல் செயலாகட்டும்! – ஆனந்த விகடன்

fishermen01இலங்கை சிறையில் இருந்த 94 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான். மீனவர்கள் வந்துவிட்டனர், ஆனால் அவர்களின் படகுகள் இன்னும் திருப்பித் தரப்படவில்லை. ‘தர மாட்டோம்’ என்கிறார் இலங்கை அமைச்சர். கருவி இல்லாமல், கடலில் என்ன செய்வான் மீனவன்?

ஒரு மீனவனின் வாழ்வாதாரம் என்பது முழுக்க முழுக்கக் கடலையும் படகையும் சார்ந்தது.

இதற்கு முன்பு இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போது, படகுகளையும் சேர்த்துதான் விடுவித்தார்கள். இப்போது ‘படகுகளை விடுவிக்க மாட்டோம்’ என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளது இலங்கை அரசு.

மீனவர்களை விடுவித்தோம் என்ற நற்பெயரைத் தேடிக்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தையே முடக்கி, வங்கக் கடலில் இருந்து துரத்தி அடிக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த நரேந்திர மோடி சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.

‘இலங்கை இராணுவத்தால் அவதிப்படும் தமிழக மீனவர்கள் பிரச்சினையும், பாகிஸ்தான் இராணுவத்தால் இன்னலுறும் குஜராத் மீனவர்களின் பிரச்சினையும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதால், இதை என்னால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்’ என்றார் மோடி.

மேலும், ‘இந்தச் சிக்கலைத் தீர்க்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்’ என்றும் சொன்னார். தான் சொன்ன சொல்லை, அதன் உண்மையான அர்த்தத்தில் பிரதமர் மோடி செயல்படுத்த வேண்டாமா?

இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி, இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பு, பொருளாதார உதவிகள் என்று இலங்கை அரசுடன் இணக்கம் பேணும் சந்தர்ப்பங்களைத் தவறவிடாத இந்திய அரசு, தமிழக மீனவர்களின் கால் நூற்றாண்டு கால அவலக் குரலுக்கு இப்போதேனும் அக்கறையுடன் தீர்வு காண வேண்டாமா?

இந்திய ஆட்சியாளர்களைத் தந்திரமாகக் கையாண்டு, தனக்கு இசைவாகப் பயன்படுத்திக்  கொள்வதில் மிகத் தேர்ந்த அனுபவம் வாய்ந்த இலங்கை அரசு, தனது நிறத்தை ‘தாமரை’க்கும் தகுந்தபடி மாற்றிக்கொள்ளும்.

இந்தச் சூழ்ச்சியை இந்தியா புரிந்துகொண்டு, தமிழக மீனவர்களின் துயர வாழ்வுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்.

மோடி அரசின் 100-வது நாள் நெருங்கும் நிலையில், தமிழகம் இத்தகைய திடமான தீர்வைத்தான் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கிறது!

TAGS: