அஸ்ஸாம் – நாகாலாந்து எல்லையில் வன்முறை நீடிப்பு

  • அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தில் புதன்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
    அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தில் புதன்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
  • கோலாகாட் மாவட்டத்தில் உள்ள புரா பங்கலா பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை வாகனத்தை தீயிட்டு கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்.
    கோலாகாட் மாவட்டத்தில் உள்ள புரா பங்கலா பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை வாகனத்தை தீயிட்டு கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்.

அஸ்ஸாம் – நாகாலாந்து எல்லைப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை சமர்ப்பித்தது.

அஸ்ஸாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில், போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே புதன்கிழமை நிகழ்ந்த மோதலின்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

நீடித்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளதாக கோலாகாட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலாதித்யா தெரிவித்தார்.

காவல் நிலையம் முற்றுகை: நாகாலாந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் அஸ்ஸாம் மக்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரங்கஜன் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் தடியடி நடத்தியும், ரப்பர் வெடிகுண்டுகளை பிரயோகம் செய்தும் கலைத்தனர்.

அதில், பெண்கள் உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். மேலும், வீட்டில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் போலீஸார் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.

கோலாகாட் நகரத்தில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தையும், அருகே உள்ள காவல் நிலையத்தையும் தாக்குவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

காவல்நிலையக் கட்டடத்துக்கு 300 மீட்டர் இடைவெளியில் வரும்போதே, ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க, போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தவே போலீஸார் முற்பட்டனர். அது முடியாமல் போனதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, போலீஸார் தாக்குதல் நடத்தினர். கலவரப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்துமாறு ராணுவத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்று கோலாகாட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலாதித்யா கூறினார்.

இதேபோல், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தடி, ஈட்டி போன்றவற்றை கொண்டு தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த 3 போலீஸ் வாகனங்களையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

அறிக்கை தாக்கல்: இந்த நிலையில், அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லையை ஒட்டிய பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் தொடர்பான அறிக்கையை பிரதமர் அலுவலகத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை சமர்ப்பித்தது.

“வன்முறை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமரின் தலைமைய் செயலர் நிருபேந்திர மிஸ்ரா கேட்டுக் கொண்டதை அடுத்து, சில மணி நேரத்தில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது’ என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லைப் பகுதியில் பதற்றத்தை தணிப்பதற்காக சுமார் 1,000 துணை ராணுவப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

அஸ்ஸாம்-நாகாலாந்து முதல்வர்கள் சந்திப்பு: இரு மாநில எல்லையில் நிகழும் மோதல்களுக்குத் தீர்வு காண அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், நாகாலாந்து முதல்வர் டி.ஆர். ùஸலியான் ஆகியோர் வியாழக்கிழமை குவாஹாட்டியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தச் பேச்சுவார்த்தையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு பங்கேற்கிரறார்.

இதனிடையே, அஸ்ஸாம் – நாகாலாந்து மாநிலங்களின் எல்லையில் நடைபெற்று வரும் கலவரச் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாநில முதல்வர்களையும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுகொண்டுள்ளார். இரு மாநில முதல்வர்களையும் புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், இவ்வாறு வலியுறுத்தினார்.

TAGS: