புதுடில்லி:”சட்டம், ஒழுங்கு விவகாரங்களில், தெலுங்கானா மாநிலத்தின் அதிகாரங்களை ஆக்கிரமிக்க, மத்திய அரசு முற்படுகிறது என்ற அச்சம் தேவையற்றது. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தையே, மத்திய அரசு அமல்படுத்துகிறது,” என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, பொதுவான தலைநகராக தற்போது, ஐதராபாத் உள்ளது. அதனால், ஐதராபாத் நகரின் சட்டம், ஒழுங்கு விவகாரங்களில், கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.இதுதொடர்பாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.,க்கள் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது, அவர் கூறியதாவது:
நாட்டின் கூட்டாட்சி அமைப்பை, சீர்குலைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு ஒரு போதும் ஈடுபடாது. தெலுங்கானா முதல்வரின் அதிகாரத்தை, நாங்கள் ஆக்கிரமிக்க முற்படவில்லை. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தையே, நாங்கள் அமல்படுத்துகிறோம். அந்தச் சட்டத்தின்படியே, நாங்கள் செயல்படுகிறோம்.இவ்வாறு, ராஜ்நாத் சிங் கூறினார்.
சந்திப்புக்குப் பின், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி., கவிதா கூறியதாவது:ஐதராபாத், இரு மாநிலங்களுக்கான தலைநகரம் அல்ல. அது, தெலுங்கானாவின் தலைநகரம். அதனால், மற்ற மாநிலங்களில் உள்ளது போல, ஐதராபாத்தின் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் அதிகாரத்தை, தெலுங்கானாவுக்கே வழங்க வேண்டும். இதுவே, எங்களின் கோரிக்கைஇவ்வாறு, கவிதா கூறினார்.