முல்லைப் பெரியாறு: 152 அடியாக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உறுதி

  • மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் வெ.கிருஷ்ணமூர்த்தி, இரா.அருள்பிரகாசம், எம்.மதுரைவீரன், பனையூர் அ.அழகு சேர்வை, ஆலாத்தூர் கே.கோவிந்தன் உள்ளிட்டோர்.
    மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் வெ.கிருஷ்ணமூர்த்தி, இரா.அருள்பிரகாசம், எம்.மதுரைவீரன், பனையூர் அ.அழகு சேர்வை, ஆலாத்தூர் கே.கோவிந்தன் உள்ளிட்டோர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதிபடக் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்த மேற்கொண்ட தொடர் சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் அவர் பேசியது:

என்னைப் பொருத்தவரை இந்த விழா, தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீதியைக் கொண்டாடும் விழா, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதற்கான வெற்றி விழா என்றே சொல்ல வேண்டும். நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டுமெனில் உறுதியும், விடாமுயற்சியும் தேவை. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில், எனது தலைமையிலான அரசு அவ்வாறு செயல்பட்டதால்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்தது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. அணையின் முழு நீர்த்தேக்க அளவான 152 அடியிலிருந்து தாற்காலிகமாக 136 அடிக்கு குறைக்கப்பட்டதை, மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்தது.

முல்லைப் பெரியாறு அணை குறித்து சென்னை, கேரள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் 2002-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தமிழக முதல்வராக இருந்த நான், ஒவ்வொரு விசாரணைக்கு முன்பும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், பொறியியல் வல்லுநர்கள், சட்ட வல்லுநர்களை அழைத்துப் பேசி, தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்.

தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வலுவான வாதங்களின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து முதல் கட்டமாக 142 அடிக்கு நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என 2006-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அணையைப் பலப்படுத்தும் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ளலாம் எனவும், இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு, கேரளம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அணையைப் பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டவுடன், தனிப்பட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்தி அணையின் முழு நீர்த்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி என நிர்ணயம் செய்து ஒரு சட்டத் திருத்தத்தை கேரள அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத் திருத்தம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று 2006 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு வழக்குத் தொடர்ந்தது.

போராட்டம்: அதன்பிறகு, ஆட்சி மாற்றம் காரணமாக, பொறுப்புக்குவந்த திமுக அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக எதையும் செய்யவில்லை. அப்போது நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரச்னை, பாலாறு நதிநீர்ப் பிரச்னை ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து அறிக்கைகளை வெளியிட்டதோடு, பல போராட்டங்களை நடத்தி, தமிழர் நலன் காக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கக் காரணமாக இருந்தேன்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை 2010-ஆம் ஆண்டு அமைத்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை தமிழக அரசு நியமிக்க வேண்டும். ஆனால், அப்போதைய திமுக அரசு, பிரதிநிதியை நியமிக்கத் தேவையில்லை என அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய பிரச்னையை, கட்சியின் பொதுவில் பேசுவதற்கு இது என்ன உள்கட்சிப் பிரச்னையா?.

தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றக் குழுவில் யாரும் நியமிக்கப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் திருத்திய சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக ஆகிவிடக் கூடும். தமிழகத்தின் வாதங்களை எடுத்து வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்படும். தமிழகத்தின் சார்பில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடும். இதனால், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்துக்கு எதிராக அமைந்துவிடக் கூடும் என விரிவான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பிறகே, வல்லுநர் குழுவில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார்.

மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு முன் தமிழகத்தின் சார்பில் வலுவான, நியாயமான சட்டப்பூர்வமான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இதன் அடிப்படையிலும், ஆய்வுகளின் அடிப்படையிலும் வல்லுநர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2012, ஏப்ரலில் சமர்ப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தில் வாதம்: இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்ற விசாரணைகளின்போது, கேரள அரசின் சட்டத் திருத்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக இருப்பதால் புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழகத்தின் சார்பில் ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களின் உண்மை நிலை, ஆய்வு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, 2006-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். இதற்கு கேரளம் குறுக்கீடு செய்யக் கூடாது. அணையின் பராமரிப்பு, வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. மத்திய நீர்வளக் குழுமம், தமிழகம், கேரள மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, மூவர் குழுவை அமைக்க மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் மேற்பார்வையில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் வகையில் அடைப்பான்கள் கீழே இறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

தம்மைச் சார்ந்த குடிமக்களின் உயர்வுக்காக காலம் தாழ்த்தாமல் முயற்சிகளைத் தளராது செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றிகள் தாமாகவே கைகூடி வரும். என்னைப் பொருத்தவரை, தமிழக மக்கள்தாம் என் மக்கள். அதனால்தான், உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முல்லைப் பெரியாறு அணையில் காலம் தாழ்த்தாமல், எனது சொந்தப் பிரச்னையாகக் கருதிச் செயல்பட்டேன். நீங்களும் எனக்கு ஒத்துழைப்பு அளித்தீர்கள். இதுதான் வெற்றியின் ரகசியம். இந்த வெற்றி நமது வெற்றி.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், அணையின் முழு நீர்த்தேக்க அளவான 152 அடி வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

TAGS: