குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்: பெண்களின் ஹீரோவான தமிழர்

murugananthamகோவை, ஆக. 24-

தமிழகத்தின் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவரான அருணாச்சலம் முருகானந்தம் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராவார். வெல்டிங் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்த முருகானந்தத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

ஒரு நாள் அவர் தனது மனைவி மறைத்து மறைத்து எதையோ எடுத்து செல்வதைப் பார்த்து எதை அவர் மறைத்துக்கொண்டு செல்கிறார் எனக்கேட்ட போது இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் என்று கூறியிருக்கிறார். அப்போதுதான், அவரது மனைவி மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்குப் பதிலாக பழைய துணியை பயன்படுத்தி வருவது புரிந்தது. நாப்கின் விலை மிக அதிகமாக இருந்ததே இதற்கு காரணம். தமிழகம் முழுக்க உள்ள ஏழை குடும்ப பெண்களின் நிலை இது தான். எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் முருகானந்தத்திற்கு ஏற்பட்டது. மிகத்தீவிர முயற்சிக்கு பிறகு ஏழரை வருடங்கள் பாடுபட்டு மிக குறைவான விலையில் நாப்கின் தயாரிக்கும் புதிய இயந்திரத்தை அவர் உருவாக்கினார்.

அவரது தயாரிப்பில் உருவான இயந்திரம் தற்போது ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 17 நாடுகளில் அதிக அளவுக்கு விற்பனையாகி வருகிறது. அடுத்த வருடத்திற்குள் 70 வளரும் நாடுகளில் தனது இயந்திரத்தை விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக முருகானந்தம் தெரிவித்தார். இவரது தயாரித்துள்ள இயந்திரம் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது.

இந்தியாவில் நாப்கின் பயன்டுத்தாத ஒவ்வொரு பெண்மணியும் சுகாதாரமான சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வழி செய்யவேண்டும் என்பதே தனது நோக்கம் என்று பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் முருகானந்தம் கூறியுள்ளார். சானிட்டரி நாப்கின் உற்பத்தியில் 10 லட்சம் மக்களுக்கு வேலை வாயப்பு உருவாக்கி தந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதே தனது லட்சியம் என்றும் முருகானந்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: