இந்தியாவா, பிரிவினைவாதிகளா? பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும்

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? என்பதை பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நமது அனைத்து அண்டை நாட்டுத் தலைவர்களையும் அழைப்பதென முடிவு செய்தோம். அதைத் தொடர்ந்து அண்டை நாட்டுடன் (பாகிஸ்தானுடன்) வெளியுறவுத் துறைச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் முடிவெடுத்தோம். அதற்கு முன்னதாக நாங்கள், தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை என்று தெரிவித்தோம். ஆனால் பாகிஸ்தான் தனது உண்மையான குணத்தை காண்பிக்கத் தொடங்கியதும், கடின முடிவை இந்தியாவால் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தோம். எனவே காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது இந்திய அரசுடனா? என்பதை பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.

திரிணமூல் மீது தாக்கு: இந்தியாவின் அண்டை நாடுகளாக ஒருபக்கம் சீனாவும், மறுபக்கம் பாகிஸ்தானும் உள்ளன. இதுதவிர பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம் தூண்டிவிடப்படுகிறது. இந்த சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருப்பதை மனதில் கொண்டே மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில், அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவீதமாக அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில், அன்னிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தங்களது மாநிலத்தில் முதலீடு செய்யக்கோரி, சிங்கப்பூர் செல்கிறார். இந்த விவகாரத்தில் திரிணமூல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.

பாகிஸ்தான் தொடர் அட்டூழியம் ; 35 போஸ்ட் மீது துப்பாக்கிச்சூடு

ஜம்மு: இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இன்றும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்திய பாதுகாப்பு படையினரின் 35 முகாம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நள்ளிரவு துவங்கிய துப்பாக்கிச்சூடு இன்னும் தொடர்வதாக தெரிகிறது. இந்த மாதத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல் இது 17வது முறை ஆகும். இன்று சம்பா மற்றும் அக்னூர், பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது.

இறத்கிடையில் காஷ்மீர் குப்வாராவில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் தொடர்வதால் திருப்பித்தாக்குங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எல்லை அத்துமீறல்கள், கவலை அளிக்கிறது. விசாரணை மட்டும் போதாது. அது அரசின் பலவீனத்தைøயே காட்டுகிறது என காங்., கட்சியை சேர்ந்த மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

ஒரு பக்கம் பேச்சு வார்த்தை என்று சொல்லிக்கொண்டு மறுப்பக்கம் தாக்குதல் வியூகத்தை பாகிஸ்தான் செய்து வருவது குறித்து மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மற்றும் ஆம்ஆத்மி கட்சியினர் கூறியுள்ளனர்.

TAGS: