ஜம்மு: எப்போதும் சர்ச்சை ஏற்படுத்தி, பல்வேறு பிரச்னைகள், நாள்தோறும் மோதல்கள், பயங்கரவாத தாக்குதல் என ரத்தக்களறியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற நீண்ட கால கனவுக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று பிள்ளையார் சுழி போடுகிறார்.
அகில இந்திய பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் விசிட்டாக அமித்ஷா இன்று காஷ்மீர் செல்கிறார். இங்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்ள் மத்தியில் பேசுகிறார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது . காஷ்மீரில் மிஷன் 44 கனவை எப்படி கைப்பற்றுவது என்பது , கட்சிவளர்ச்சி பணிகள் ஆகியன குறித்து விவாதிக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் ஒமர் அப்துல்லா ( தேசிய மாநாட்டு கட்சி ) ஆட்சி செய்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் ஜனவரி 15 ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இங்கு தேசிய மாநாட்டு கட்சி , மக்கள் ஜனநாயக கட்சி (மெகபூபா முக்தி ) ஆகியோர் தான் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆண்டு இத்தனை காலத்தில் இங்கு பெரும வளர்ச்சி எதுவும் காணப்படவில்லை. மேலும் இங்கு நிலவி வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் இருந்து வருகின்றன. நாள்தோறும் நடக்கும் மோதல்களால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். எனவே இங்கு பா.ஜ., ஆட்சிக்கு வரவேண்டிய தருணம் இது என்று பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா சூளுரைத்தார்.
இதன் முதற்கட்டமாக அமித்ஷா ஜம்மு காஷ்மீர் வருகிறார். இன்று ஆலோசனை கூட்டமும் , நாளை கத்துவாவில் நடக்கும் பேரணி கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இங்கு 44 சட்டசபை தொகுதிகளை பிடித்து ஆட்சியில் அமர வேண்டும் என்பது பா.ஜ.,வின் கனவு ஆகும். இங்கு மொத்தம் 87 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
சொல்லி அடிப்பார்: சமீபத்திய பார்லி., தேர்தலில் உ.பி., மாநிலத்தில் பெரு வாரியான வெற்றியை பெற்று தருவேன் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். இங்கு மொத்தம் 80 லோக்சபா தொகுதியில் 71 ஐ பா.ஜ., கைப்பற்றி சாதனை படைத்தது. இது அவருக்கு பெரும் பேரை பெற்று தந்தது. இதன் காரணமாக இவருக்கு அகில இந்திய பா.ஜ., தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் மோடியின் நெருக்கமான, நம்பிக்கை பெற்றவர் ஆவர். ஜம்மு காஷ்மீரில் கனவு நிறைவேறும் காலத்தை நோக்கி அமித்ஷா !