நாளுக்கு நாள் தாக்குதலை விரிவுபடுத்தும் பாக்., படை

kashmir-border-india-pakistanஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டிய, இந்திய ராணுவத்தினரின், 40 நிலைகள் மற்றும் 24 கிராமங்கள் மீது, பாகிஸ்தான் படையினர், நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மூன்று பேர் காயமடைந்தனர்.

அத்துமீறி தாக்குதல் :

இந்தியா பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனாலும், மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லைப் பகுதியில் இருக்கும், இந்திய ராணுவத்தினரின் நிலைகள் மற்றும் எல்லையை ஒட்டிய கிராமங்களை நோக்கி, பாக்., படையினர், அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றும் இந்த தாக்குதல் தொடர்ந்தது. ஜம்மு, சம்பா மாவட்டங்களில் உள்ள எல்லையை ஒட்டிய பகுதிகளில், இந்திய ராணுவத்தினரின், 40 நிலைகள் மற்றும் எல்லை அருகேயுள்ள, 24 கிராமங்களை நோக்கி, பாக்., படையினர் தாக்குதல் நடத்தினர். உடன், பி.எஸ்.எப்., என அழைக்கப்படும், எல்லை பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு துவங்கிய சண்டை, நேற்று காலை, 7:00 மணி வரை தொடர்ந்தது. இதுவரை இல்லாத வகையில், சம்பா மாவட்ட பகுதியிலும், பாக்., படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதாவது, நாளுக்கு நாள், பாக்., படையினரின் தாக்குதல் விரிவடைந்து வருகிறது. இந்தச் சண்டையில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றாலும், அப்பாவிகள் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், கடும் அச்சம் குடி கொண்டுள்ளது. கடந்த 15 நாட்களில், 21 முறையும், இந்த மாதத்தில், 23 முறையும், பாக்., படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதற்கிடையில், பாக்., படையினர் தாக்குதலால், எல்லைப் பகுதி குக்கிராமங்களில் இருந்து, பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து தங்கியுள்ள மக்களை, நேற்று, பா.ஜ., தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர், சந்தித்துப் பேசினர்.

TAGS: