தேனி : முல்லை பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை வீண் பிடிவாதம் காட்டி பிரச்னையை கிளப்பி வந்த கேரள அரசியல்வாதிகள் உண்மை நிலையை உணர்ந்து தங்கள் நிலையை மாற்றிகொண்டுள்ளனர். இதனால் தேனி- , இடுக்கி மாவட்ட மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்னையை பொறுத்தவரை ஆரம்பம் முதல் தற்போது வரை கேரள மக்கள் எந்த பிரச்னையும் செய்யவில்லை. ஆனால் கேரள காங்., மற்றும் கம்யூ., அரசியல்வாதிகள் இதனை வைத்தே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடத்தி வந்தனர். இதனால் தேனி, இடுக்கி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.கலவரம் வெடித்தது.
தமிழக அரசு முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தியது. அதன் பலத்தை சுப்ரீம் கோர்ட் நியமித்த வல்லுநர் குழு ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை கூட ஏற்காமல் பிரச்னை செய்தனர். இதன் எதிரொலியாக 2011 ஜனவரியில் தேனி மாவட்டத்தில் கேரளாவிற்கு எதிராக கலவரம் வெடித்தது. இரண்டு மாதம் நீடித்த இந்த கலவரத்தி ல் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட மக்களிடையே உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. கேரள அரசியல்வாதிகள் தேனி மாவட்டத்தில் வாங்கிய சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.அதேபோல் தேனி மாவட்ட மக்கள் இடுக்கி மாவட்டத்தில்தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
மெல்ல.. மெல்ல மாற்றம் :
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி, பால், காய்கறிகள், இறைச்சி கொண்டு செல்வது தடுக்கப்பட்டது. இப்பிரச்னையால் கேரள அரசு கலக்கம் அடைந்தது. தேக்கடியில் சுற்றுலாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதன் பின் கேரள அரசியல்வாதிகளின் போக்கில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்படத் தொடங்கியது. பெரியாறு அணை பிரச்னையில் கடுமை காட்ட மாட்டோம். சட்டரீதியாக போராடுவோம், என சட்டசபையிலேயே அறிவித்தனர். இப்பிரச்னையில் நடந்த சட்டப்போராட்டத்திலும் தமிழகத்திற்கு வெற்றி கிடைத்தது. முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், உத்தரவை அமல்படுத்த தனி நிபுணர்குழுவையும் அமைத்தது. இனிமேல் நீர்மட்ட பிரச்னையை இந்த நிபுணர்குழுவே கையாளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கேரள அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டு நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துழைப்பு வழங்கினர்.
அனுமதியளிப்பு :
கடந்த வாரம் முல்லைப் பெரியாறு அணையில் பெய்யும் மழையளவு குறித்து தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்ய முல்லைக்கொடியில் அமைக்கப்பட்டுள்ள மீட்டர் ரீடிங் மையத்திற்கு சென்ற போது கீழ்நிலை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். உயர் அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு அனுமதி வழங்கினர். வாரந்தோறும் வியாழக்கிழமைதமிழக அதிகாரிகள் இந்த மையத்திற்கு சென்று வரலாம், என கேரள அரசே தெளிவாக விளக்கமளித்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஆக., 22ம் தேதி வெள்ளிக்கிழமை முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வருக்கு மதுரையில் நடந்த பாராட்டு விழா தொடர்பாக கேரள அரசியல்வாதிகளிடம் இருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் முல்லைபெரியாறு அணை அருகே உள்ள ஒன்றாம் மைலில் கல்லூரி விழா ஒன்றில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோல், இடுக்கி எம்.பி., ஜோஸ் உட்பட எல்லோரும் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் முல்லை பெரியாறு அணை பிரச்னை பற்றி முதல்வர் பேசுவார் என கேரளாவில் உள்ள எல்லா மீடியாக்களும் குவிந்திருந்தன. ஆனால் முதல்வரோ, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்களோ முல்லை பெரியாறு அணை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இப்பிரச்னையில் முழுமையாக தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டும் கருத்து வெளியிடவில்லை.
தற்போது கேரள அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றம், தேனி மற்றும் இடுக்கி மாவட்ட மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் கேரள மக்களுக்கும், இடுக்கி மாவட்டத்தில் தமிழக மக்களுக்கும் வழக்கம் போல் நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைத்து வருகிறது. இது இரு மாவட்ட மக்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.