1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்.; இந்தியா கடும் கண்டனம்

indpakisபுதுடில்லி/ஜம்மு: கடந்த 1971ம் ஆண்டுநடந்த போருக்கு பின்னர், பாகிஸ்தான் ராணுவம் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இன்று நடந்த உயர் அதிகாரிகள் மட்டத்திலான போன் மூலம் நடந்தபேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தபேச்சுவார்த்தையின் போது, இந்தியா சார்பில், பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டதுடன், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க கொடி சந்திப்பு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு செவ்வாயன்று நடைபெறும், இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் பிஆர் குமார் மற்றும் பாகிஸ்தான் சார்பில் மேஜர் ஜெனரல் அமிர் ரியாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 1971ம் ஆண்டு நடந்த போருக்கு பின், தற்போதுபாகிஸ்தான் ராணுவம் கடுமையாக தாக்கி வருவதாக எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் தாக்குதல் தீவிரமாக உள்ளது. 45 நாட்களாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. எல்லையில் உள்ள அனைத்து இந்திய நிலைகள் மற்றும் பொது மக்கள் குடியிருப்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகிறது . எல்லையில் அமைதி நிலவ நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தீவிர முயற்சி செய்தோம். கொடி அணிவகுப்பு நடத்த முயற்சி எடுத்தோம். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. என கூறினார்.

இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் 95 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், சர்வதேச எல்லையில், அமைதி ஒப்பந்தத்தை மீறி 25 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஐ.நா., கோரிக்கை: இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐ.நா.,கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் இரு தரப்பும் முழு மனதுடன் ஈடுபட வேண்டும். அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள், அணு ஆயுத சோதனை தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என கூறினார்.

எல்லை பகுதியிலிருந்து 15,000 குடும்பங்கள் வெளியேறின…

ஜம்மு: 33 ஆண்டுகளில் இல்லாத வகையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் 15,000 குடும்பங்கள் சொந்த கிராமங்களில் இருந்து வெளியேறி உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் கடந்த ஒன்றரை மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சர்வதேச எல்லையையொட்டி உள்ள ஆர்.எஸ்.புரா, அர்னியா பகுதிகளில் இந்திய நிலைகள் மட்டுமின்றி, எல்லையோர இந்திய கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதால் அங்கு வசிக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தாக்குதல் நீடிப்பதால் 15,000க்-கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது சொந்த கிராமங்களில் இருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும், கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக எல்லையோர கிராமங்கள் அனைத்திலும் ஜம்மு காஷ்மீர் அரசின் சார்பில் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் சஜத் அகமது கிச்லு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்ட எல்லை பாதுகாப்பு படை தளபதி பதக், 1971ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பின்னர் தற்போது தான் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.

TAGS: