இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே 3 நாள்கள் நடைபெற்ற நதிநீர் பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
எனினும், இதுதொடர்பாக அடுத்த மாதம் தில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே கிஷன் கங்கா அணை வடிவமைப்பு, ஜீலம், செனாப் நதிகளில் செயல்படுத்தப்படவுள்ள 4 நீர்மின் உற்பத்தி திட்டங்கள் ஆகியவை குறித்து இருநாட்டு அதிகாரிகள் இடையேயான 3 நாள் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் சிந்து நதிநீர் ஆணையத்தின் ஆணையர் மிர்ஸா ஆசீஃப் பெய்க் கூறியதாவது:
இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும் சாதகமான சூழலில் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
அடுத்த மாதம் தில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறோம்.
எங்களது கவலைகளை இந்தியா நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் பிரச்னை சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லாமல் தீர்க்கப்பட வேண்டும்.
ஒருவேளை எங்களது வாதங்கள் ஏற்கப்படவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மிர்ஸா ஆசீஃப் பெய்க் தெரிவித்தார்.