குற்றப்பின்னணி அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 13 ஆண்டுகள் தடை: அரசு முடிவு

narendra_modizபுதுடில்லி : குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் வரை தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது.

குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான போக்கை கையாள பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட குறைந்த பட்சம் 13 ஆண்டுகள் வரை தடை விதிப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஏதாவதொரு குற்றத்திற்காக 7 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நபர் 13 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தகுதி அற்றவராகிறார். அதாவது அவர் சிறை தண்டனை முடிந்த வந்த பிறகும் 6 ஆண்டுகள் வரை அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆகிறார்.

அதுமட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார் என்னும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டம் திருத்தம் தொடர்பான மசோதா பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காக சட்ட அமைச்சகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் ஒப்புதல் பெற்ற பிறகு, அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால், அவர்கள் மீதான குற்றத்திற்கு பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களே பொறுப்பு எனவும் சுப்ரீம் கோர்ட் நேற்று அளித்த உத்தரவின் எதிரொலியாக மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குற்றப்பின்னணி கொண்ட தலைவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவது தொடர்பான பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் வேட்பாளர்கள் மீதான குற்றப்பத்திரிக்கை தீர்வு காணப்படாவிட்டால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் திருத்தம் கொண்டு வர சட்ட அமைச்சகம் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய சட்ட கமிஷனிடம் ஏற்கனவே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.

குற்றப் பின்னணி கொண்டவர்கள் மட்டுமின்றி, தேர்தல் கமிஷனிடம் பொய்யான சொத்து மதிப்பை தாக்கல் செய்யபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த வேட்பாளரும் தகுதி நீக்கம் செய்யப்படவும் சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு பொய்யான சொத்து விபரங்களை அளிப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

TAGS: