இலங்கை – இந்திய மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை!

tamilnadu_fishman120813இலங்கை – இந்திய மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இருநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலான  பேச்சுவார்த்தையொன்று புதுடெல்லியில் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில், மீன்பிடித்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி, அமைச்சின் ஆலோசகர் கலாநிதி எஸ். சுபசிங்ஹ மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியொருவரும் பங்கேற்கவுள்ளனர்.

இருநாட்டு மீனவர்களுக்கு இடையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இனங்காணப்பட்ட விடயங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் இந்த இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையின்  போது ஆராயப்படவிருப்பதாக, இலங்கை- இந்திய மீனவர் நலன்புரி அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர் பி. அந்தோனிமுத்து தெரிவித்தார்.

இதேவேளை,  இந்த பேச்சுவார்த்தையின் இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன்  தமிழகத்தில் இருந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TAGS: