பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேசியதால் இந்தியா ஏமாற்றம்

narendra_modiz“”காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா ஏமாற்றமடைந்தது. அதனால்தான், இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அவர் சனிக்கிழமை ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டு ஊடகத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார்.

அப்போது, கடந்த 25ஆம் தேதி இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து மோடி கூறியதாவது:

பாகிஸ்தானுடன் அமைதியான, நட்புறவுடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இருதரப்பு கோட்பாடுகளுக்கு உள்பட்டு, எந்தவொரு முக்கிய பிரச்னை குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்குத் தயக்கம் இல்லை.

எனினும், சமரசப் பேச்சுவார்த்தை முயற்சிகளை எள்ளி நகையாடவும், காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் முயன்றதால் இந்தியா ஏமாற்றமடைந்தது. எனினும், பாகிஸ்தானுடனான நட்புறவு வலுப்பட இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.

எனது அரசின் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமருடன் நான் நடத்திய சந்திப்பு சிறப்பாக அமைந்திருந்தது. இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் சந்திக்க வேண்டும் என்றும், இரு தரப்பு உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்று ஆராய வேண்டும் என்றும் நாங்கள் அப்போது முடிவு செய்தோம் என்று மோடி தெரிவித்தார்.

TAGS: