பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் விளக்கமளித்துள்ளார்.
இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையான மூன்று நாட்கள் கொழும்பில் கலதாரி விடுதியில் இடம்பெற்றது.
இதில் இந்தியாவில் இருந்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தார்.
கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்ட கருத்துக்கள் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருந்தன.
இதனால் சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதியாக சுப்பிரமணியம் சுவாமி கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்றாரா? என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீனிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன்,
இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவராலேயே இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.
உதாரணத்துக்கு ஒருவர் அமைச்சராக இருந்தால் அவரை இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக நியமிக்கத் தேவையில்லை.
அமைச்சர் பதவியையோ அல்லது அரசாங்கப் பதவியையோ, அதிகாரி பதவியையோ வகிக்காத ஒருவர் ஒரு நாட்டுக்கு இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செல்கிறார் என்றால் அவர் தூதுவராகவோ, சிறப்புத் தூதுவராகவோ நியமிக்கப்படுவார்.
உங்களின் கேள்விக்கான பதில் இதில் உள்ளது என்று பதிலளித்துள்ளார்.
சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அறிவிக்கப்படாததால் அவர் இந்திய அரசின் பிரதிநிதியாக இலங்கைக்கு செல்லவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
பல மனதை வருத்தும் செய்திகளுக்கிடையில் இது சிறு தெம்பூட்டும் செய்தியாக உள்ளது. அந்த சுப்ரமணியன் ஊசி முனையில் நூல் கோர்க்க சிறிது இடம் கொடுத்தால் தன தலையையே அதில் நுழைக்கப் பார்ப்பார். தனநிலை முன்நிலை என நடமாடும் ஒரு சுயவிளம்பர பரதேசி.. .