“போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்கள் ஆத்திரமூட்டக் கூடியவை. இரு நாடுகள் இடையிலான நல்லுறவுக்கு அவை பாதகமான சூழலை உருவாக்கி விட்டன’ என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதியிலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இது மிகவும் தீவிரமானதும், ஆத்திரத்தைத் தூண்டும் நடவடிக்கையும் ஆகும். இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு பாதகமான சூழலை இத்தாக்குதல்கள் உருவாக்கி விட்டன.
எனினும், இந்திய, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ இயக்குநர்களுக்கு இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தச் சூழல் மாறும் என்று நம்புகிறேன்.
மேலும், பாகிஸ்தானின் அத்துமீறலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவத்தினரும், சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அருண் ஜேட்லி கூறினார்.