பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியைத் தூய்மையான நகரமாக (ஸ்மார்ட் சிட்டி)மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா-ஜப்பான் இடையே சனிக்கிழமை கையெழுத்தானது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமராகப் பதவியேற்றதும், தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பூடானுக்கு நரேந்திர மோடி சென்றார். பின்னர், 2ஆவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, நேபாளத்துக்கு அவர் சென்றார். இதனிடையே, “பிரிக்ஸ்’ நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிரேசில் சென்றார்.
அதைத் தொடர்ந்து, இந்திய துணைக் கண்டத்துக்கு வெளியே, இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்கான தனது முதல் பயணமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்றார். அவர், அந்த நாட்டில் மொத்தம் 5 நாள்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதில் முதல்கட்டமாக கியோட்டோ நகருக்கு 2 நாள் பயணமாக அவர் சென்றார்.
இதையொட்டி, தலைநகர் டோக்கியோவில் இருந்த ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, மோடியை வரவேற்பதற்காக கியோட்டோவுக்கு வந்தார். கியோட்டோ விருந்தினர் மாளிகையில் மோடியை அவர் நேரில் வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து, கியோட்டோ நகர நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் வாராணசியைத் தூய்மையான நகரமாக மாற்றுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில், ஜப்பானுக்கான இந்தியத் தூதர் தீபா வாத்வாவும், கியோட்டோ நகர மேயர் டாய்சாகு கடோகாவாவும் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறுகையில், “இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகள் இடையே பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும், நகரை நவீனப்படுத்துதல் மற்றும் கலை, கலாசாரம், கல்வி ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பு ஏற்படும்’ என்றார்.
ஜப்பான் பிரதமர் விருந்து: அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே விருந்தளித்தார். அப்போது தனது மனதில் இந்தியாவுடனான உறவுக்கு சிறப்பிடம் கொடுத்திருப்பதாகவும், மோடியின் பயணத்தின் மூலம் இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று நம்புவதாகவும் ஷின்úஸா அபே தெரிவித்தார்.
முன்னதாக, ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின்போது அவருக்கு சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள், பகவத் கீதை ஆகியவற்றை மோடி வழங்கினார். பின்னர், ஜப்பானின் பாரம்பரிய நிகழ்ச்சியான மீன்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியில் நரேந்திர மோடியும், ஷின்úஸா அபேயும் கலந்து கொண்டனர்.
அதிகாரப்பூர்வ சந்திப்பு: பிரதமர் நரேந்திர மோடி- ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு, டோக்கியோவில் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்பு, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.