ராமேசுவரத்தில் 38 நாள்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், மீனவரின் படகை, தங்களது கப்பலால் மோதி மூழ்கடித்த இலங்கை கடற்படையினர், 15 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 62 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஜூலை 25 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 38 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர்.
இந்த நிலையில், கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரின் படகை, தங்களது கப்பலால் மோதி கடலில் மூழ்கடித்தனர். இதில் கடலில் தத்தளித்த ஜேம்ஸ், ரட்சகர், ஜெலஸ்டின், மரியரஜித், கிரிஸ்டன் ஆகிய 5 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.
மேலும், அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த உய்த்தராஜன் என்பவரின் படகைச் சுற்றி வளைத்து, அதிலிருந்த மிசிலான், அருளானந்தம், சூசைராஜ், எமல்டன் ஆகிய 4 மீனவர்கள் மற்றும் நெடுந்தீவுப் பகுதியில் பழுதாகி, கடலில் நிறுத்தப்பட்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த வரப்பிரசாதம் என்பவரின் படகிலிருந்த பூமிநாதன், வரப்பிரசாதம், பாஸ்கரன், நம்புராஜன், முரளிதரன், ராபின் ஆகிய 6 மீனவர்கள் உள்பட மொத்தம் 15 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.
பின்னர் உய்த்தராஜன், அந்தோணிசாமி ஆகியோரின் படகில் சென்ற 9 மீனவர்களை மட்டும் இலங்கை ஊர்க்காவல்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி லெனின் செப்.16ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் வரப்பிரசாதம் என்பவரின் படகில் சென்ற 6 மீனவர்களும் நெடுந்தீவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.