மோடி ராஜ்ஜியத்தின் முதல் நூறு நாட்கள்

narendra modiஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மோடியின் தலைமையிலான அரசே தனிப் பெரும் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ளது.

திறன் மிக்க பேச்சாளரும், சமூக வலை தளங்களை மிக நேர்த்தியாக கையாண்டவருமான மோடி இந்தியாவுக்கு நல்ல காலத்தை கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியை தேர்தல் பிரசாரத்தின்போது அளித்திருந்தார்.

புதிய அரசு பெரிய அளவிலான பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. சிவப்பு நாடாவை குறைத்து – அரசாங்கத்தால் நடத்தப்படும் பொதுத் துறை நிறுவனங்களை அவர் தனியார்மயப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நரேந்திர மோடியோ மிகப் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரவில்லை.

இது ஆச்சரியமானதல்ல என்கிறார் பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளின் மூத்த செய்தி ஆசிரியர் மிஹிர் சர்மா.

“இந்த அரசின் முதல் பட்ஜெட்டைப் பார்த்தால், ஏற்கனவே இருக்கும் அரச நிர்வாகத்தில், சட்டங்களில் வர்த்தகர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் சிறிது சிறிதாக மாற்றங்களை உருவாக்கவே அரசு விரும்புவது தெளிவாகத் தெரிகிறது” என்றார் சர்மா.

பெண்கள் பாதுகாப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெண்கள் பாதுகாப்பு இந்தியாவில் முக்கிய பேசு பொருளாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் தனது குடியரசு தின உரையின் போது நரேந்திர மோடி, சமூகம் பெண்களை நடத்தும் விதம் மாற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமருடன் இந்தியப் பிரதமர்பாகிஸ்தான் பிரதமருடன் இந்தியப் பிரதமர்

தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

இரு நாடுகளுக்கு இடையேயான இறுக்கத்தை தளர்த்தும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த மாதம் எல்லையில் ஏற்பட்ட சூட்டுச் சம்பவங்கள் மற்றும் காஷ்மீர் பிரிவினைத் தலைவர்களை பாகிஸ்தானிய தூதர் சந்தித்தது போன்ற காரணங்களை முன்வைத்து பாகிஸ்தானுடன் நடக்கவிருந்த வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுக்களை இந்திய அரசு ரத்து செய்தது.

இந்து தேசியவாதம்

அடிப்படையில் ஒரு இந்து தேசியவாதி என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதில் பெருமை கொள்பவர் மோடி.

இந்த அரசு பதவியேற்றபிறகு, முஸ்லீம்களை குறிவைத்து மத மோதல்கள் அதிகரித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுவரையிலான ஆட்சி குறித்து பலர் திருப்தி தெரிவித்தாலும், நாட்டின் சகிப்புத் தன்மை மோடியின் ஆட்சியின் கீழ் குறைந்துவிடும் என்ற அச்சமும் சிலரிடம் உள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் இந்து தேசிய செயல்திட்டத்தில் இருந்து மோடி கொஞ்சமும் விலகவில்லை என்று கூறும் மூத்த பத்திரிகையாளரான மானினி சாட்டர்ஜி தாங்கள் உறுதியானவர்கள் என்ற பிம்பத்தை கட்டியெழுப்பவே இந்த அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று பேசியது சர்ச்சையை தோற்றுவித்தது.

பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று பெயரிட்டதும் தமிழகத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தின.

இருந்தும் மோடி அரசு மீது மக்கள் திருப்தியுடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. -BBC

TAGS: