கங்கை தூய்மையாவது எப்போது? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி By dn, புதுதில்லி

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்தத் தலைமுறையில் இது சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த நிலை வாரியான செயல் திட்டத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு கண்டிப்புடன் உததரவிட்டது.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கங்கை நதியை தூய்மைப்படுத்தி, அதன் பழம் பெருமையை மீட்போம்’ என்று மக்களவைத் தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்தது. இத்தேர்தலில் வெற்றி பெற்று, அக்கட்சி ஆட்சி அமைத்தது. தங்களின் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, கங்கை நதியைப் புதுப்பிக்கும் திட்டத் துறை என்ற துறையைப் புதிதாக உருவாக்கி, மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி வசம் அதனை அரசு ஒப்படைத்தது.

இந்நிலையில், கங்கை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், பிரமாணப்பத்திரம் ஒன்றை மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி சார்பில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கங்கை நதி, நாட்டில் உள்ள 29 பெரு நகரங்கள், 23 சிறு நகரங்கள், 48 நகரங்கள் வழியாகப் பாய்கிறது. “இந்த நதியை மாசற்றதாக மாற்றுவோம்’ என்று மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு அரசு தேசிய முன்னுரிமை அளித்துள்ளது. அதற்கேற்ப இத் திட்டத்தை நிறைவேற்ற பொருத்தமான உத்திகளும், முனைப்பான பல செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

கங்கையாற்றின் நீரோட்டத்தைப் பராமரிப்பது, அதில் உள்ள பல்வேறு வகையிலான மாசுக்களைக் குறைப்பது, நதியைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தத் திட்டத்தில் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்வது ஆகியவை இத்திட்டத்தின் முனைப்பான செயல் திட்டங்களில் அடங்கும்.

இந்த இலக்குகளை எட்டுவதில், பல-அமைப்பு, பல-பரிமாண, பல-துறை அணுகுமுறை அடங்கியுள்ளது. இதைச் சாதிக்க, பல்வேறு மத்திய அமைச்சகங்கள் இடையே கலந்தாலோசனை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பொது உத்தியையும், செயல்திட்டத்தையும் வகுக்க இந்தக் கலந்தாலோசனை தொடங்கியுள்ளது.

இத்திட்ட அமலாக்கத்தின் இலக்குகளை எட்டுவது தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கங்கை நதிப் படுகை மேலாண்மைத் திட்டத்தை இறுதி செய்வதற்கு 7 ஐ.ஐ.டி. நிறுவனங்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை, இந்த ஆண்டு டிசம்பருக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சமயத்தில், இத்திட்டம் தொடர்பான மத்திய அமைச்சகச் செயலர்கள் இடையிலான கலந்தாலோசனையும் முடிவடைந்து விடக் கூடும் என்று மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு: பிரமாணப் பத்திரத்தைப் பரிசீலித்த நீதிபதிகள், “”உங்களுடைய செயல்திட்டத்தைப் பார்த்த பிறகு, கங்கை நதி இன்னும் 200 ஆண்டுகளானாலும் தூய்மைப்படுத்தப்படாது என்று தோன்றுகிறது. இந்தக் கனவுத் திட்டம் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யுங்கள்.

கங்கை தனது பழம்பெருமையைத் தக்க வைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அந்த நதியை, அதன் அசல் வடிவத்தில் அடுத்த தலைமையினராவது பார்க்க முயற்சி செய்யுங்கள். நாங்கள் அதைக் காண்போமா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கண்டிப்புடன் கூறினர்.

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

இத்திட்ட அமலாக்கத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி வருவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், 2,500 கி.மீ. நீளத்துக்குப் பாயும் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து சாமானிய மக்களுக்கு எவ்வாறு விளக்கமளிக்கப்படும் என்பது குறித்துதான் நாங்கள் கவலைப்படுகிறோம்.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது என்ற பிரதமரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற, இத்தகைய அதிகாரவர்க்க அணுகுமுறை உதவாது. இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான நிலை வாரியான செயல் திட்டத்தை 3 வாரங்களுக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

உத்தேசத் திட்டமாக இல்லாமல், என்னென்ன நடவடிக்கைகள் எவ்வப்போது எடுக்கப்பட உள்ளன? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் துணை பிரமாணப்பத்திரத்தை சொலிசிட்டர் ஜெனரல் தாக்கல் செய்ய வேண்டும்.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த 2003-இல் வெளியிட்ட அறிவிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, கங்கோத்ரியில் (கங்கை உற்பத்தியாகும் இடம்) இருந்து கங்கை நதி இறங்கி வரும் 135 கி.மீ. தொலைவு வரை அமைந்துள்ள, சுற்றுச்சூழல் சிக்கல் சார்ந்த பகுதிகளில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளியுங்கள் என்று நீதிபதிகள், அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

TAGS: