இந்தியாவில் ஜிஹாத் (புனிதப் போர் என்ற பெயரிலான தாக்குதல்கள்) நடத்த,”காய்தாத் அல் ஜிஹாத்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக “அல்-காய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜவாஹிரி பேசிய விடியோ காட்சி, அல்-காய்தா அமைப்பின் ஊடகப் பிரிவான “அஸ் சஸாப் ஃபவுண்டேஷன்’ மூலம் சமூக வலைதளங்களில் புதன்கிழமை நள்ளிரவு முதல் ஒளிபரப்பாகியது.
இந்தியாவில் உள்ள பயங்கரவாதக் குழுக்களையும், இஸ்லாமிய இளைஞர்களையும் கவரும் நோக்கில் சர்ச்சைக்குரிய வகையில் விடியோவில் ஜவாஹிரி பேசியுள்ளதால் நாட்டுக்குப் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன. இந்த விடியோ விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், நாடு முழுவதும் விழிப்புணர்வுடன் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
55 நிமிட விடியோ காட்சி: சுமார் 55 நிமிட விடியோ உரையில், அய்மான் அல் ஜவாஹிரி உருது, அரபி மொழிகள் கலந்து பேசியுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: “ஆப்கனில் உள்ள தலிபான்களின் தலைவர் முல்லா ஒமர் ஆசியுடன் இந்தியாவில் தொடங்கப்படும் பிரிவுக்கு “காய்தாத் அல் ஜிஹாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அல் காய்தாவின் பாகிஸ்தான் ஷரியா குழு தலைவரான ஆசிம் உமர் இந்தியப் பிரிவுக்குத் தலைமை தாங்குவார். உஸ்தாத் உஸாமா மகமூத், இதன் செய்தித் தொடர்பாளராக இருப்பார்.
இஸ்லாமியர்களைப் பிரிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள எல்லைகளைத் தகர்க்கும் வகையில் இந்தியப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய துணைக் கண்டத்தில் பிரிந்து கிடந்த முஜாஹிதீன்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட அமைப்பு இது. இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்ப ஒஸாமா பின்லேடன் விட்டுச் சென்ற பாதையில் தொடர்ந்து செயல்படவும் இந்த நோக்கத்துக்கு எதிராக செயல்படும் எதிரிகள் மீது ஜிஹாத் (புனிதப் போர்) தொடுத்து நமது சுதந்திரத்தை நிலைநாட்டவும் இந்த அமைப்பு அவசியமாகிறது. ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், குஜராத், வங்கதேசம், மியான்மர் என இஸ்லாமியர்களைப் பிரிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள எல்லைகளைத் தகர்த்து, அங்கு வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான அநீதி, ஒடுக்குமுறைகளை முறியடிப்போம்’ என்று ஜவாஹிரி பேசியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விடியோ காட்சி தொடர்பாக தில்லியில் கூட்டு உளவு அமைப்புகள் குழு வியாழக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. உளவு அமைப்புகளான “ரா’, “ஐபி’, பாதுகாப்புத் துறை உளவு அமைப்பான “டிஐஏ’ உள்ளிட்டவற்றின் உயரதிகாரிகள் அதில் கலந்து கொண்டனர். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், அந்த விடியோவில் ஜவாஹிரிதான் பேசியிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உளவுத் துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
பின்லேடனுக்குப் பிறகு… அல் காய்தா இயக்கத் தலைவர் ஒஸாமா பின்லேடனை பாகிஸ்தானில் 2011-ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சில வெடிகுண்டுத் தாக்குதல்களை சில பயங்கரவாதக் குழுக்களுடன் சேர்ந்து அல் காய்தா இயக்கம் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
2013-ஆம் ஆண்டு ஜூலையில் அல்-காய்தா இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட விடியோவில் “உலகம் முழுவதும் புனிதப் போருக்குத் தயாராகுங்கள்’ என்று இந்தியாவில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், அவர்களுக்கு வெளியில் உள்ள தொடர்புகள் ஆகியவற்றை மத்திய உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் தங்கள் புதிய பிரிவைத் தொடங்கியுள்ளதாக அல் காய்தா தலைவர் ஜவாஹிரி விடியோ உரையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
முடக்க முடியாத ஒளிபரப்பு
விடியோ காட்சிகள் புதன், வியாழக்கிழமை இடையிலான நள்ளிரவு 12.50 மணியில் இருந்து வெவ்வேறு சமூக ஊடகங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இது பற்றிய தகவல் அறிந்ததும் அவற்றை முடக்க, மத்திய உள்துறை உளவு அமைப்புகள் மூலம் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், அந்த இணையதளங்களின் கட்டுப்பாடு, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இணையத்துடன் தொடர்புடைய “சர்வர்’களில் இருப்பதால் அவற்றை முடக்க இயலவில்லை.
மத்திய உளவுத் துறை விசாரணை
இந்தியாவில் “காய்தாத் அல் ஜிஹாத்’ என்ற பெயரில் “அல் காய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி பேசியுள்ள விடியோ காட்சிகள் குறித்தும் அதன் விளைவாக உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் மத்திய உளவுத் துறை (ஐ.பி.) தீவிரமாக விசாரித்து வருகிறது.
தில்லியில் உளவு அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம், வியாழக்கிழமை அதிகாலையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஏ.கே. தோவால், உளவு அமைப்புகளின் கூட்டுக் குழு தலைவர் ஆர்.என். ரவி, மத்திய உளவுத் துறை இயக்குநர் சையது ஆசிஃப் இப்ராஹிம், “ரா’ பிரிவு செயலர் அலோக் ஜோஷி, ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் “ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இஸ்லாமியர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையிலும் தங்கள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த விடியோவை அல் காய்தா வெளியிட்டுள்ளதாகக் கருதுகிறோம். இந்த விடியோ குறித்து பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த நிலையில், அல் காய்தா விடியோ தொடர்பாக மத்திய உளவுத் துறை உயரதிகாரி கூறுகையில், “சிரியா, இராக் ஆகிய நாடுகளில் அல்-காய்தாவில் இருந்து பிரிந்த பயங்கரவாதிகள் (ஐ.எஸ்.) நடத்திவரும் தாக்குதல்களால் அசாதாரண நிலை உருவாகி வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கருதப்படும் நிலையில், இந்திய இஸ்லாமிய இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் நோக்குடன் இத்தகைய விடியோவை அல் காய்தா வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்தியாவில் அல்-காய்தா அமைப்பு செயல்படுகிறதா என்பதை தீவிரமாக விசாரிக்கவுள்ளோம். இது தொடர்பாக மாநில உளவு அமைப்புகளுடன் இணைந்து கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.