ரயில்வே அமைச்சரின் மகனுக்கு பிடி ஆணை

பாலியல் பலாத்கார வழக்கில் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடாவின் மகன் கார்த்திக் கெளடாவை கைது செய்ய பெங்களூரு மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது.

கார்த்திக் கெளடா மீது கன்னட நடிகை மைத்ரி கெளடா பெங்களூரு ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார்.

அதில், தனக்கும், கார்த்திக் கெளடாவுக்கும் மங்களூரில் ரகசியத் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், குடகு மாவட்டம், குஷால் நகரில் வேறொரு பெண்ணுடன் கார்த்திக் கெளடாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றிய கார்த்திக் கெளடா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், “கார்த்திக்கின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய போலீஸார் இரு முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. அதனால், அவரை கைது செய்ய பிடி ஆணை வழங்க வேண்டும்’ என்று பெங்களூரு 8-ஆவது கூடுதல் தலைமை மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் கெளடாவை கைது செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் சரணடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: